"இந்திய அணியில் இடமில்லை.. அந்த 2 மணி நேரம் மறக்க முடியாது" ரிங்கு சிங்கை நெகிழ வைத்த ஷாருக்கான்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திரமுமான ரிங்கு சிங், கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதபோது, தனக்கு கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் செய்த உதவியை முதன்முறையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் முக்கிய வீரராக இடம்பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் 15 வீரர்கள் கொண்ட அணியில் சேர்க்கப்படாமல், ரிசர்வ் வீரராக மட்டுமே அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஏமாற்றத்தில் இருந்த ரிங்கு சிங்கிற்கு, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் தன்னுடன் விமானத்தில் அழைத்து சென்று, உடன் இருந்து ஆதரவளித்து இருக்கிறார்.

ரிங்கு சிங்கிற்கு என்ன நடந்தது?
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள ரிங்கு சிங், "2024 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அமெரிக்கா புறப்பட்டு விட்டது. நான் ரிசர்வ் வீரராக இருந்ததால், விசா நடைமுறைகளுக்காக தனியாக செல்ல வேண்டியிருந்தது. எனது விமானமும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த நாள், ஷாருக் கான் சாரும் வேறொரு பயணமாக செல்லவிருந்தார்" என்று கூறினார்.
"நான் தனியாக பயணம் செய்யவிருப்பதை எப்படியோ தெரிந்துகொண்ட ஷாருக் கான் சாரும், அவரது மேலாளர் பூஜா மேடமும், என்னை அவருடன் அவரது தனி விமானத்தில் (Charter Flight) வரும்படி கூறினார்கள். எனக்கு ஒரே பதற்றமாகிவிட்டது. 'நான் எப்படி ஷாருக் கான் சாருடன் தனியாகப் பயணம் செய்வது? அவரிடம் என்ன பேசுவது?' என்று மிகவும் தயங்கினேன். பலமுறை மறுக்க முயன்றேன்" என்று அந்தத் தருணத்தை விவரித்தார்.
மறக்க முடியாத 2 மணி நேரம்
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், ஷாருக் கான் சார் ஒருமுறை சொல்லிவிட்டால், நம்மால் எப்படி மறுக்க முடியும்? காரில் விமான நிலையம் செல்லும் வழியில் அவர் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார். அந்த ஐபிஎல் சீசன் எனக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அதனால், அதைப் பற்றிப் பேசி என்னை ஊக்கப்படுத்தினார். என் வாழ்வில் முதல்முறையாக ஒரு தனி விமானத்தில் பயணம் செய்தேன், அதுவும் ஷாருக் கான் சாருடன். அந்த இரண்டு மணி நேரப் பயணம் என் வாழ்வில் மறக்க முடியாதது. அது ஒரு அற்புதமான அனுபவம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், கடினமான காலகட்டத்தில் ஷாருக்கான் அளித்த இந்த ஆதரவு, தனக்கு பெரும் மனவலிமையைக் கொடுத்ததாக ரிங்கு சிங் கூறினார். தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications