ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தமாக 72 வீரர்களை 10 அணிகள் வாங்கியுள்ளன. இதற்காக ரூ.469.95 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட டாப் 10 வீரர்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் ஜெட்டா நகரில் பரபரப்பாக நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் இடம்பிடித்துள்ளார். இவரை வாங்குவதற்கு லக்னோ, ஆர்சிபி மற்றும் ஐதராபாத் அணிகள் போட்டிபோட்டன. இறுதியாக ரூ.20.75 கோடிக்கு லக்னோ அணி கைப்பற்றிய நிலையில், டெல்லி அணி ஆர்டிஎம் கார்டை தூக்கியது.

அப்போது லக்னோ அணி தரப்பில் ரூ.27 கோடி விலை நிர்ணயிக்கப்பட, டெல்லி அணி பின் வாங்கியது. இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். கேகேஆர் அணி வாங்க முயற்சித்தாலும், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் கடுமையான போட்டியிட்டன. இறுதியாக ரூ.26.75 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி வாங்கியது.
இந்தப் பட்டியலில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் வெங்கடேஷ் ஐயர் இடம்பிடித்துள்ளார். பெரிய தொகைக்கு போவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆர்சிபி அணி இவரை வாங்க தீவிர முனைப்பு காட்டியது. இறுதியாக கேகேஆர் அணி ரூ.23.75 கோடி கொடுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து 4வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே, ஆர்ஆர், குஜராத், டெல்லி, ஆர்சிபி, ஐதராபாத் என்று அதிக அணிகளால் வாங்க முயற்சிக்கப்பட்டவர்.
இறுதியாக ஆர்டிஎம் மூலம் பஞ்சாப் அணியால் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். அதேபோல் இந்திய ஸ்பின்னரான சாஹலை வாங்க குஜராத், சிஎஸ்கே, லக்னோ, ஆர்சிபி, ஐதராபாத் அணிகளால் முயற்சிக்கப்பட்டாலும், ரூ.18 கோடி கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. இவரும் அர்ஷ்தீப் சிங்கும் 4வது இடத்தில் பகிர்ந்துள்ளனர். பின்னர் 5வது இடத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜாஸ் பட்லர் பிடித்துள்ளார். இவரை வாங்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் போட்டியிட்டது. இறுதியாக ரூ.15.75 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது.
6வது இடத்தில் இந்திய அணியின் கேஎல் ராகுல் இருக்கிறார். சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் போட்டி போட்டாலும் டெல்லி அணி இவரை ரூ.14 கோடி கொடுத்து கைப்பற்றியது. 7வது இடத்தில் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ட்ரென்ட் போல்ட் பிடித்துள்ளார். ராஜஸ்தான் அணியுடன் தீவிரமாக போட்டியிட்டு மும்பை அணி இவரை ரூ.12.50 கோடி கொடுத்து வாங்கியது. அதேபோல் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியாலும், ஹேசல்வுட் ஆர்சிபி அணியாலும் ரூ.12.50 கோடிக்கு வாங்கப்பட்டனர்.
இதன்பின் 8வது இடத்தில் முகமது சிராஜ் இருக்கிறார். இவருக்கு ரூ.12.25 கோடி கொடுத்து குஜராத் அணி வாங்கியது. இதன்பின் 9வது இடத்தில் ரூ.11.75 கோடி கொடுத்து டெல்லி அணியால் வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க்கும், 10வது இடத்தில் ரூ.11.25 கோடி கொடுத்து ஆர்சிபி அணியால் வாங்கப்பட்ட பில் சால்ட்-ம் இடம்பிடித்துள்ளனர். இதில் ரூ.10.75 கொடுத்து டெல்லி அணியால் வாங்கப்பட்ட நடராஜன் 12வது இடத்தை பிடித்துள்ளார்.