ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தில் 19 வீரர்களை வாங்கியுள்ள லக்னோ அணி, தொடக்க வீரர்களையே வாங்காமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது லக்னோ அணி வாங்கியுள்ள முழு வீரர்களின் விவரங்களையும் பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுலுடன் பஞ்சாயத்தானது. இதன்பின் புதிய ஆலோசகராக ஜாகீர் கான் கொண்டு வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட்-ஐ ரூ.27 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதேபோல் நிக்கோலஸ் பூரன் ரூ.21 கோடி, மயங்க் யாதவ் ரூ.11 கோடி, ரவி பிஷ்னாய் ரூ.11 கோடி, ஆயுஷ் பதோனி ரூ.4 கோடி, மோசின் கான் ரூ.4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் லக்னோ அணி எந்தெந்த வீரர்களை வாங்கியுள்ளது, எவ்வளவு தொகைக்கு வாங்கியுள்ளது என்பதை பார்க்கலாம்.
ரிஷப் பண்ட் ரூ.27 கோடி, ஆவேஷ் கான் ரூ.9.75 கோடி, ஆகாஷ் தீப் ரூ.8 கோடி, டேவிட் மில்லர் ரூ.7.5 கோடி, அப்துல் சமத் ரூ.4.2 கோடி, மிட்சல் மார்ஷ் ரூ.3.4 கோடி, ஷாபாஸ் அஹ்மத் ரூ.2.4 கோடி, எய்டன் மார்க்ரம் ரூ.2 கோடி, மேத்யூ பிரீட்ஸ்கி ரூ.75 லட்சம், ஷமாப் ஜோசப் ரூ.75 லட்சம் ( ஆர்டிஎம்), எம் சித்தார்த் ரூ.75 லட்சம், அர்ஷின் குல்கர்னி ரூ.30 லட்சம், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ரூ.30 லட்சம் ஆகியோர் வாங்கப்பட்டனர்.
தொடர்ந்து உள்ளூர் வீரர்களான யுவராஜ் சவுத்ரி ரூ.30 லட்சம், பிரின்ஸ் யாதவ் ரூ.30 லட்சம்ன், ஆகாஷ் சிங் ரூ.30 லட்சம், திக்வேஷ் சிங் ரூ.30 லட்சம், ஹிம்மத் சிங் ரூ.30 லட்சம், ஆர்யன் ஜுயல் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 6 வெளிநாட்டு வீரர்கள், 18 இந்திய வீரர்கள் என்று 24 வீரர்களை ரூ.119.90 கோடிக்கு வாங்கியுள்ளது.
லக்னோ அணி நட்சத்திர வீரர்கள் கொண்ட அணியை கட்டமைத்தாலும், தொடக்க வீரர்களையே வாங்காமல் ஏலத்தில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்காக மார்க்ரம் தொடக்கம் கொடுத்தாலும், அவரை முழு நேர தொடக்க வீரராக கணக்கில் கொள்ள முடியாது.