IPL Auction: தோனியின் ஏலம் அந்த தருணம் கிரிக்கெட்டை மாற்றி விட்டது.. மெய்சிலிர்த்த ரிச்சர்ட் மேட்லி
சென்னை: தோனியின் பெயர் ஐபிஎல் ஏலத்தில் அறிவிக்கப்பட்டு, அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியதன் மூலம் கிரிக்கெட்டே முற்றிலுமாக மாறிவிட்டது என ரிச்சர்ட் மேட்லி கூறி இருக்கிறார். 2008இல் முதன்முதலாக ஐபிஎல் தொடர் துவங்கியது. அப்போது முதல் ஐபிஎல் ஏலத்தை நடத்தியவர் ரிச்சர்ட் மேட்லி.
அவர் தோனியின் பெயரை ஏலத்தில் அறிவித்த போது அனைத்து அணிகளும் அவருக்காக போட்டி போட்டன. அதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்கியது. அது பற்றிய அனுபவத்தை விவரித்து மெய்சிலிர்த்து இருக்கிறார் ரிச்சர்ட் மேட்லி. இதுபற்றி அவர் பேசியதாவது -

"2008இல் முதல் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. நான் என்னிடம் இருந்த வீரர்கள் ஏலப் பட்டியலை எடுத்து முக்கிய வீரர்கள் யார் என்று பார்த்தேன். ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட், சோப் அக்தர், முத்தையா முரளிதரன் ஆகியோரது பெயர்கள் இருந்தன. இரண்டாவது இடத்தில் மகேந்திர சிங் தோனி என்ற பெயர் இருந்தது."
"தோனியின் அடிப்படை விலை 4 லட்சம் டாலர்களாக இருந்தது. அறையில் இருந்த அனைவரும் அவருக்காக ஏலத்தில் போட்டி போட்டனர். அப்போது கேமரா இருந்திருக்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசையாக இருந்தது. அந்த தருணத்தை நினைவில் வைத்திருக்கும் ஒரே நபராக நான் இப்போது இருக்கிறேன். தோனிக்காக ஏலம் சென்றது. 9,50,000 டாலர்கள், அதை எடுத்து ஒரு மில்லியன் டாலர்கள் வரை ஏலம் சென்றது."
"ஆறு வாரம் ஒரு தொடரில் ஆடும் வீரருக்காக இத்தனை பெரிய தொகையா? என்று நான் வியந்து போனேன். 15 லட்சம் டாலர்களுக்கு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். நான் ஏலத்தை முடித்து எனது சுத்தியலை கீழே வைத்த தருணத்தில், உலகம் மாறிவிட்டது என நான் உணர்ந்தேன்."
"அதன்பின் கிரிக்கெட் உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது என்பதும் உண்மை. தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக ஆனார். அதன் பின் கிரிக்கெட் வேறு மாதிரியாக மாறிவிட்டது. அந்த மாற்றத்தை நிகழச் செய்த மனிதன் நான்தான். 16 வருடங்களுக்கு பின்னரும் தோனியை விற்ற ஒரே மனிதர் நான் மட்டுமே." என பெருமை பொங்க பேசினார் ரிச்சர்ட் மேட்லி.


Click it and Unblock the Notifications