ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியால் ஆர்டிஎம் மூலமாக வாங்கப்பட்ட இளம் நட்சத்திர வீரரான ரச்சின் ரவீந்திரா பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு, அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் சிஎஸ்கே அணி தரப்பில் 7 வீரர்கள் வாங்கப்பட்டனர். நூர் அஹ்மத், ரவிச்சந்திரன் அஸ்வின், டெவான் கான்வே, கலீல் அஹ்மத், ரச்சின் ரவீந்திரா, ராகுல் த்ரிப்பாட்டி மற்றும் விஜய் சங்கர் ஆகிய 7 பேரையும் வாங்கியுள்ளது.

ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின் உள்ளிட்டோரை மீண்டும் வாங்கியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதிலும் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி ஆர்டிஎம் மூலமாக ரூ.4 கோடிக்கு வாங்கியது ஜாக்பாட் போல் அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் பேசுகையில், மிடில் ஓவர்களில் அட்டாக் செய்ய வேண்டும் என்பதற்காக ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னரான நூர் அஹ்மத்தை வாங்கியுள்ளோம். ஒருவேளை மீண்டும் ஸ்பின் பிட்ச்கள் அமைந்தால், நிச்சயம் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.
இதனால் அஸ்வின், ஜடேஜா உடன் இணைந்து நூர் அஹ்மத் இருப்பது சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருக்கும். அஸ்வினை பொறுத்தவரை அவருடன் நமக்கு மிகப்பெரிய அன்பும், பிணைப்பும் உள்ளது. சிஎஸ்கே அணியில் சிறப்பாக பொருந்தி போவார். அவர் மிகச்சிறந்த வீரர். தற்போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை பல்வேறு நேரங்களில் பயன்படுத்த முடியும்.
அதேபோல் ஜடேஜாவுக்கு சமமான திறமையுடன் ரச்சின் ரவீந்திரா உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்து அவரின் திறமையில் முன்னேற்றம் காணும் போது, நிச்சயம் ரச்சின் ரவீந்திராவை சரியான தொகைக்கு வாங்கினோம் என்று புரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணியின் நேரடி பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை மிடில் ஆர்டரில் எந்த வீரரும் சொதப்பினாலோ அல்லது ஜடேஜாவுக்கு காயமடைந்தாலோ மாற்று வீரராக ரச்சின் ரவீந்திரா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.