நட்சத்திர வீரர்களை எடுக்காத சிஎஸ்கே..!! கஞ்சத்தனமா.. அல்லது, கையில் எடுக்கப்படுகிறதா "பிளான் பி?"
பெங்களூரு : ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் செயல்பாடு ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
மார்க்கியூ பட்டியல் எனப்படும் நட்சத்திர வீரர்களின் பட்டியல் முதலில் வந்தது. இதில் சென்னை அணிக்காக விளையாடிய டுபிளஸிஸ், அஸ்வின் பெயரும் இடம்பெற்றது.
இந்த பட்டியலில் குறைந்தது 2 வீரர்களையாவது சென்னை அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

முயற்சி இல்லை
அஸ்வின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர். தனது ஐபிஎல் வாழ்க்கையை சென்னை அணிக்காக தொடங்கினார் அஸ்வின். மீண்டும் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று அஸ்வின் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஸ்வினை எடுக்க சென்னை அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

டுபிளஸிஸ் ஏமாற்றம்
இதே போன்று சென்னை அணியின் நட்சத்திர வீரரான டுபிளஸிஸை ஏலத்தில் எடுக்க சென்னை முயற்சித்தது. பெங்களூரு அணியும் கடுமையாக போட்டி போட்டது. சென்னை அணி நினைத்து இருந்தால் அவருக்கு 10 கோடி வரை செலவு செய்து இருக்கலாம். ஆனால் வெறும் 7 கோடிக்கே சென்னை அணி விலகியதால், பெங்களூரு அணி தட்டிச் சென்றது.

விலகிய சென்னை
இதே போன்று அதிரடி ஆஸ்திரேலிய வீரர் வார்னரை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டியது. ஆனால் வார்னருக்கு எதிர்பார்த்த அளவுக்கு போட்டி இல்லை. இருப்பினும் 4 கோடி ரூபாய் தாண்டிய போது, பந்தயத்திலிருந்து சென்னை விலகியது. இதனால் வெறும் 6.25 கோடி ருபாய்க்கே டெல்லி அணி வார்னரை வாங்கியது.

என்ன காரணம்?
இதே போன்று குயிண்டன் டி காக்கை சென்னை அணி முதலில் ஆர்வம் காட்டி பின்னர் வெளியேறியது. இதனால் சென்னை அணியின் யுத்திகளில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு சென்னை அணி வாய்ப்பு தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications