சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர இளம் வீரர் சாம் கரணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிஎஸ்கே அணி என்ற டேக் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் சாம் கரணை ரிலீஸ் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 2வது வாரத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் நவம்பர் 15ஆம் தேதி ஐபிஎல் தொடரில் ஆடி வரும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி தரப்பில் யாரெல்லாம் ரீடெய்ன் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

அதன்படி டெவான் கான்வே, சாம் கரண், தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், சிஎஸ்கே அணி எளிதாக ரூ.20 கோடிக்கும் அதிகமான தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க முடியும் என்று கணக்கிடப்பட்டது.
சிஎஸ்கே அணி சாம் கரணை ரிலீஸ் செய்வதற்கு சோசியல் மீடியாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு மாறாக ரச்சின் ரவீந்திராவை ரிலீஸ் செய்யலாம் என்றும், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கின் நியூசிலாந்து பாசம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் சிஎஸ்கே சோசியல் மீடியா பக்கத்தில் சாம் கரணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெறத் தொடங்கியதால், ரசிகர்கள் அமைதி காத்தனர். இந்த நிலையில் சாம் கரணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிஎஸ்கே என்ற டேக் நீக்கப்பட்டுள்ளது. இதனால் சாம் கரணுடன் சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாக தெரிகிறது.
இதன் மூலமாக சிஎஸ்கே அணியில் இருந்து சாம் கரண் ரிலீஸ் செய்யப்பட உள்ளது மறைமுகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனில் இருந்தே சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் மீது முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே பிரித்வி ஷாவை ட்ரையல்ஸ்-க்கு அழைத்த நிலையில், அவரை வாங்க சிஎஸ்கே முனைப்பு காட்டி வருகிறது. இதனால் டெவான் கான்வேவையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.