சென்னை : ஐபிஎல் மினி ஏலம் வரும் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெறுகிறது. ஐபிஎல் ரசிகர்கள் இந்த ஏலத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவைப்படாத வீரர்களை விடுவித்தது.
இதனால் யார் எந்த மாற்று வீரர்களை வாங்கப் போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தை போலவே மாதிரி ஏலம் ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தும் அவருடைய மகன் அனிருத் ஸ்ரீகாந்தும் நடத்தினார்கள்.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 17 அரை கோடி ரூபாய் வரை வீரர்கள் ஏலம் போனார்கள். இந்த மாதிரி ஏலத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாயகன் டிராவிஸ் ஹெட்டை 17 அரை கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணியும் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா 17 அரை கோடி ரூபாய்க்கு குஜராத் அணியும் ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில் மாதிரி ஏலத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சென்னை அணி நிர்வாகி போல் பங்கேற்று வீரர்களையும் மற்ற அணிகளையும் கேலி கிண்டல் செய்தது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பு அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஹர்சல் பட்டேல் பெயர் வந்ததும் ஹைதராபாத் அணி அவரை வாங்க ஆர்வம் காட்டியது.
இதனை கவனித்த ஸ்ரீகாந்த் ஹைதராபாத் அணி எப்போதும் போல் திருந்தவே திருந்தாது. நீங்கள் சரியாக அந்த வீரரின் பெயரை படித்தீர்களா. இவருக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்று கிண்டல் செய்தார். இதேபோன்று பேட் கம்மின்சை கொல்கத்தா வாங்கியவுடன் இதை தாம் முன்னாடியே எதிர்பார்த்தேன் என்று நகைச்சுவையாக கூறினார்.
அப்போது சர்துல் தாக்கூரின் பெயர் வந்ததும் ஸ்ரீகாந்த் அருகே இருந்த சிஎஸ்கே அணிக்காக வந்திருந்த நபர் கையை தூக்கியதும் ஸ்ரீகாந்த் அதைப் பிடுங்கி விட்டார். எதற்காக இவரை வாங்குகிறாய் என்று கேட்டதற்கு அவர் நமக்கு இடம் இருக்கிறது. நமக்கு தேவை என்று கூறினார்.அதற்கு ஸ்ரீகாந்த் இடம் இருக்கிறது என்றால் வாங்கி விடுவாயா? சர்துல் தாக்கூர் தேவையே இல்லை என்று நகைச்சுவையாக கூறினார்.
அப்போது சர்துல் தாக்கூரை ராஜஸ்தான் ஐந்தரை கோடி கொடுத்து வாங்கியவுடன் அஸ்வின் நண்பர் தான் ராஜஸ்தான் அணிக்காக வந்து மாதிரி ஏலத்தில் பங்கேற்று இருப்பதாகவும், நீங்கள் உண்மையிலேயே அஸ்வினின் நண்பர் தானா என்று கூறி கிண்டல் அடித்தார். இதேபோன்று ஸ்ரீகாந்த் டேரல் மிச்சலை சிஎஸ்கேவுக்கு 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். டேரன் மிச்சல் சிஎஸ்கே அணியின் நட்சத்திரமாக விளங்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.