சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1426 நாட்களுக்குப் பிறகு தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் விளையாட உள்ளது. இந்த தொடருக்காக சிஎஸ்கே அணியினர் கடந்த ஒரு மாதமாக சேப்பாக்கத்தில் பயிற்சி செய்து வந்தனர் . இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன குஜராத் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் முதல் வெற்றியை பெறுவதற்காக சிஎஸ்கே அணி இன்று கடுமையாக முயற்சிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். மேலும் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராக கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதல்முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடுகிறது.

அதே சமயம் சிஎஸ்கேவின் அடுத்த நட்சத்திரமான ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுகிறார். லக்னோ அணி டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசுர பலத்துடன் உள்ளது. இதனால் லக்னோ அணியை சிஎஸ்கே எப்படி வீழ்த்த போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதல் போட்டியில் கடைசி கட்டத்தில் கேப்டன் தோனி களமிறங்கியது பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் தோனி இன்றைய ஆட்டத்தில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் தோனியின் ஆட்டத்தை சென்னையில் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டதே. இதனால் ரசிகர்கள் காட்டுப்பசியில் இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்ற விருந்தை இன்று தோனி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடருக்காக 48 இன்னிங்ஸில் களமிறங்கி இருக்கிறார். இதில் 1363 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 43 என்று அளவில் ஸ்ட்ரைக் ரேட் 143 என்று அளவிலும் அசுரத்தனமாக உள்ளது.

இதில் ஏழு அரை சதங்களும் அடங்கும். இதனால் தோனி இன்றைய போட்டியில் முன்கூட்டியே களமிறங்கி லக்னோ பந்துவீச்சாளர்களை வெளுக்க வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரு அணிகளும் இதுவரை 1 முறை ஐபிஎல் போட்டியில் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.