சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நான்காவது தோல்வியை தழுவி இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் குவித்து லக்னோ அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐந்தாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது. எட்டு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி, நான்கு தோல்வி என எட்டு புள்ளிகள் உடன் ரன்ரேட் 0.41 என்ற அளவில் சரிந்து இருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ள லக்னோ அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. லக்னோ அணி எட்டு போட்டிகள் விளையாடி 5 வெற்றி மூன்று தோல்வி என நான்காவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்திலும், கொல்கத்தா அணி 10 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், சன்ரைசஸ், லக்னோ அணி முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளது.
சிஎஸ்கே மற்றும் குஜராத் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திலும் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்திலும், டெல்லி 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பஞ்சாப் 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆர்சிபி 2 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறது. இதனால், சிஎஸ்கே அணி பிளே ஆப் க்கு செல்ல வேண்டும் என்றால் எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் குறைந்தபட்சம் நான்கு போட்டிகள் ஆவது வெல்ல வேண்டும் இன்னும் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.