சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது 22 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கிறது. இதில் டெல்லி ஆர் சி பி குஜராத் சிஎஸ்கே போன்ற அணிகள் 5 லீக் போட்டிகள் விளையாடிவிட்டன. மற்ற அணிகள் நான்கு போட்டிகள் தான் விளையாடி உள்ளன.
சென்னையில் நடைபெற்ற 22 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இருக்கிறது. இது சிஎஸ்கே அணிக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது வெற்றியாகும். இந்த போட்டிக்கு முன்பு சிஎஸ்கே அணி நான்காவது இடத்தில் சரிந்து இருந்தது.

இதனால் இன்றைய வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதனால் சிஎஸ்கே நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, இரண்டு தோல்வி என ஆறு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் தான் இருக்கிறது.
சிஎஸ்கே அணியின் ரன் ரேட் 0.66 என்ற அளவில் முன்னேறி இருக்கிறது. 138 என்று இலக்கை சிஎஸ்கே அணி 17.4 வது ஓவரில் அதாவது 14 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று இருக்கிறது. இதுவே சிஎஸ்கே அணி 15 ஓவரில் எல்லாம் இந்த இலக்கை எட்டி இருந்தால், சிஎஸ்கே அணி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும். ஏனென்றால் லக்னோ நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, ஒரு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 0.77 என்ற அளவில் தான் இருக்கிறது.
கொஞ்சம் சிஎஸ்கே அணி அதிரடி காட்டி இருந்தால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கலாம். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றும் சிஎஸ்கே அணி ஒரே இடத்தில் தான் இருக்கிறது. இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடர் எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. புள்ளி பட்டியலில் தற்போது ராஜஸ்தான் அணி 8 புள்ளிகள் முதல் இடத்திலும், கே கே ஆர் அணி 6 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
லக்னோ மூன்றாவது இடத்திலும், சிஎஸ்கே நான்காவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐந்தாவது இடத்திலும், பஞ்சாப் ஆறாவது இடத்திலும், குஜராத் ஏழாவது இடத்திலும், மும்பை எட்டாவது இடத்திலும், ஆர்சிவி ஒன்பதாவது இடத்திலும், டெல்லி பத்தாவது இடத்திலும் இருக்கிறது.