IPL 2026: குவாலிபையர் 2வில் ராஜஸ்தான், குஜராத் போட்டி மழையால் தடை, டை ஆனால் என்ன ஆகும்? விதி என்ன?
சந்திகார்: ஐபிஎல் 2026 தொடரின் முக்கியமான 'குவாலிஃபையர் 2' போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே முல்லன்பூரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும். இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற இரு அணிகளும் மும்முரமாக களமிறங்குகின்றன.
இது நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது. அதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் 77 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான பதிலடி கொடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் குவாலிஃபையர் 1-ல் ஆர்.சி.பி.யிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து களமிறங்குகிறது.

மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்று போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றியுடன் வருகிறது.இன்றையப் போட்டியில் வெற்றியாளர் இறுதிப் போட்டியில் இடம்பிடிப்பது உறுதியான நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டால் அல்லது முழுமையான முடிவு எட்டப்படாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் ஆர்சிபியை எதிர்கொள்ளும் வாய்ப்பை எந்த அணி பெறும்?
ஐபிஎல் விதி 16.10.3 இத்தகைய சூழ்நிலையைத் தெளிவுபடுத்துகிறது. குவாலிஃபையர்கள், எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி உட்பட எந்தவொரு ப்ளேஆஃப் போட்டியும் டையில் முடிந்தாலோ அல்லது முடிவு எட்டப்படாவிட்டாலோ, போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும், தேவைப்பட்டால் கூடுதல் சூப்பர் ஓவர்களும், ஒருவேளை சூப்பர் ஓவர் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், லீக் சுற்றின் புள்ளிகள் பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முன்னிலை வகித்த அணி, "சம்பந்தப்பட்ட ப்ளேஆஃப் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படும்."
ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியைப் பொறுத்தவரை, இன்று வானிலை அல்லது பிற காரணங்களால் சூப்பர் ஓவர் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸை விட முன்னணியில் இருந்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மேலும், இந்தப் போட்டிக்கு மாற்று நாள் (Reserve Day) கிடையாது. வானிலை அறிக்கையின்படி, டாஸ் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக மழைக்கும், போட்டி முழுவதும் மேகமூட்டமான வானத்திற்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
