IPL: 'நடராஜன், குல்தீப் எல்லாம் இருக்கும்போது அவருக்கு 4 ஓவர் கொடுக்கணுமா?' அக்சரை விளாசிய அஸ்வின்
ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி படுதோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல் செய்த மிகப்பெரிய கேப்டன்சி தவறுகளை சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னணி பந்துவீச்சாளர்களை ஓரம் கட்டிவிட்டு, பகுதி நேர பந்துவீச்சாளரை நம்பி அவர் எடுத்த விபரீத முடிவுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இந்தப் போட்டியில் டெல்லி அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் யாருமே ஓவருக்கு 10 ரன்களுக்குக் கீழ் விட்டுக்கொடுக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அக்சர் படேல், குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, முகேஷ் குமார், டி நடராஜன் என 5 சிறந்த பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தும், பகுதி நேர ஸ்பின்னரான நிதிஷ் ராணாவிடம் முழுமையாக 4 ஓவர்களைக் கொடுத்தார் கேப்டன் அக்சர் படேல். அந்த 4 ஓவர்களில் ராணா 53 ரன்களை வாரி வழங்கினார்.

தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய அஸ்வின் அக்சரை சரமாரியாகக் கேள்விகேட்டுள்ளார். அவர் கூறுகையில், "இந்தத் தவறு ஒருமுறை அல்ல, ஆட்டத்தில் பலமுறை நடந்துள்ளது. இத்தனை முக்கிய பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, அணியில் முதலில் 4 ஓவர்களை வீசி முடித்தது நிதிஷ் ராணா என்பதுதான் கொடுமை. டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் ஒருசில நாட்களில் ரன்களை வாரி வழங்குவது சாதாரண ஒன்றுதான். சிறந்த பவுலரான நடராஜன் கூட நேற்றைய போட்டியில் 40 ரன்களைக் கொடுத்தார். அதற்காக முக்கிய பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தாமல் இருக்கக் கூடாது. அவர்கள் 50 ரன்கள் கொடுத்தாலும் பரவாயில்லை, முதலில் முன்னணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களைத் தான் முடித்திருக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேலை முழுமையாகப் பயன்படுத்தாதது குறித்தும் அஸ்வின் பேசினார். "இந்த ஆட்டத்தில் மொத்தமாகவே 2 விக்கெட்டுகள் தான் விழுந்தது. அதில் ஒன்று ரன் அவுட். அக்சர் படேல் மட்டுமே 1 விக்கெட் எடுத்தார். அவர் வீசிய ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசியும் கூட, தன்னை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அதேபோல, குல்தீப் யாதவ் தனது முதல் 2 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்ததால் அவருக்கு மேற்கொண்டு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. குல்தீப் ஒரு மேட்ச் வின்னர். ஆரம்பத்தில் ரன்கள் கொடுத்தாலும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றக்கூடியவர். அக்சர் மற்றும் குல்தீப் இருவரும் 50 ரன்கள் கொடுத்தாலும் அவர்களை நம்பி பந்துவீச அழைத்திருக்க வேண்டும். ஏனென்றால் விக்கெட் எடுப்பதுதான் அவர்களின் முக்கியமான வேலை" என்று அக்சர் படேலின் முடிவுகளை அஸ்வின் கடுமையாகச் சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications