For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெகா ட்விஸ்ட்.. அஸ்வினை நாசூக்காக சிஎஸ்கே-வை விட்டு தூக்கி வீசிய தோனி.. என்ன சொன்னார்?

லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் முற்றிலுமாக நீக்கப்பட்ட விட்டதாக தற்போது கூறப்படுகிறது. தோனி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசுகையில், அஸ்வினுக்கு தாங்கள் அதிக அழுத்தத்தை கொடுப்பதாகவும், அவரை நீக்கிய பின் அணியில் செய்யப்பட்ட பந்துவீச்சாளர்கள் மாற்றம் சிறப்பாக இருப்பதாகவும் கூறினார்.

தோனி அஸ்வினை முற்றிலுமாக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிவிட்டதைத் தான் இவ்வாறு சொல்லி இருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். என்ன நடந்தது? ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டு இருக்கிறார்? தோனி ஏன் அவர் மீது அதிருப்தியுடன் இருக்கிறார்? என்று பார்க்கலாம்.

IPL Ravichandran Ashwin dropped from CSK after Dhoni s comments

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தில் இணைந்தார். அவர் அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த நிலையில், அவரை ஏலத்தில் வாங்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர ஆர்வம் காட்டியது. ஏலத்தில் அஸ்வினுக்காக சிஎஸ்கே அணி மிகவும் போட்டி போட்டு அதிக விலைக்கு அவரை வாங்கியது. 9.75 கோடி ரூபாய்க்கு அஸ்வினை வாங்கியது சிஎஸ்கே அணி.

இந்த தொகை என்பது அஸ்வின் இருந்த ஃபார்முக்கு மிகவும் அதிகம் தான். எனினும், அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் தனது பந்துவீச்சின் மூலம் மாயாஜாலங்களை செய்வார், விக்கெட்டுகளை வேட்டையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் இருந்தது. அவர் மீது நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது.

அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் வேட்டையாடினார்களோ அதே போல இப்போதும் நடக்கும் என விமர்சகர்களும் நம்பினர். ஆனால், நடந்ததோ வேறு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் அஸ்வினின் பௌலிங் செயல்பாடு படுமோசமாகவே இருந்தது. அவர் அதிக ரன்களை வாரி இறைத்து இருந்தார். மேலும், மொத்தமே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதுவும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துதான் வீழ்த்தி இருந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறு போட்டிகளில் விளையாடினார். அதில் 120 பந்துகளை வீசி 198 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். அவரது சிறந்த பௌலிங் என்பது 48 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்ததுதான். அவரது பௌலிங் சராசரி 39.60 என்பதாகும். அதாவது சுமாராக 40 ரன்கள் விட்டுக் கொடுத்து தான் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

அஸ்வினின் பௌலிங் எக்கானமி 9.9 என்பதாகும். அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை விட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த மோசமான செயல்பாட்டின் காரணமாக பலரும் அஸ்வினை நீக்க வேண்டும் என்று சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜேமி ஓவர்டன் இரண்டு ஓவர்கள் வீசி 24 ரன்களை வாரி இறைத்திருந்தார். அவரும் சரியாக பந்து வீசவில்லை.

ஆனால், தோனி போட்டி முடிந்தவுடன் பேசுகையில், இந்த பௌலிங் கூட்டணி தற்போது சரியாக இருப்பதாக சொன்னார். அப்படி என்றால் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினை முற்றிலுமாக அணியில் இருந்து நீக்கிவிட்டோம் என்பதைத்தான் அவ்வாறு சொல்லி இருக்கிறார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

போட்டி முடிந்தவுடன் தோனி அஸ்வினை பற்றி பேசியதாவது: "நாங்கள் அஸ்வினுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து விட்டோம். அவர் முதல் ஆறு ஓவர்களில் பவர் பிளேவில் இரண்டு ஓவர்களை வீசினார். இப்போது நாங்கள் அணியில் மாற்றம் செய்தோம். இது நல்ல பௌலிங் கூட்டணியாக இருக்கிறது. இந்த பௌலிங் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது" என்று கூறினார். இதன் பொருள் என்னவெனில் அஸ்வின் இனி சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற மாட்டார் என்பதுதான். அதைத்தான் தோனி இவ்வாறு சொல்லி இருக்கிறார் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

அஸ்வின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை. குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் அவர் கட்டுக்கோப்பாக வந்து வீசி அந்தப் போட்டியில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் அவர் மீது இத்தனை எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி இருக்காது. அவரும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது தான் அவருக்கு எதிராக மாறியிருக்கிறது.

ரவீந்திர ஜடேஜாவும் அதிக விக்கெட்களை வீழ்த்தவில்லை. அவரும் சராசரியாகவே செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் சில போட்டிகளில் மிகவும் கட்டுக்கோப்பாக வந்து வீசி இருக்கிறார். அதுதான் ஜடேஜாவை காப்பாற்றி இருக்கிறது. ஆனால் அஸ்வின் அதிக ரன்களை வாரி இறைத்ததால் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எப்போதும் ரவிச்சந்திரன் அஸ்வினை ஆதரித்து பேசுவார். ஆனால் அவர் ஆறாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் அஸ்வினை மிகவும் விமர்சித்து பேசி இருந்தார்.

ஸ்ரீகாந்த் அப்போது பேசுகையில், "நான் இந்தத் தொடர் துவங்கும் போது என்ன நினைத்தேன் தெரியுமா? சிஎஸ்கேவில் நாம் அதிரடியான பௌலிங் லைன் அப்பை வைத்திருக்கிறோம் என்று நினைத்தேன். ஒவ்வொரு அணியும் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் மூன்று உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் (அஸ்வின், ஜடேஜா, நூரு அகமது), மதீஷா பதிரனா மற்றும் கலீல் அகமது ஆகியோரை சந்திக்க திணறுவார்கள் என்று நினைத்தேன்."

"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பௌலிங்கைத்தான் அதிகம் நம்பி இருக்கும், 180 ரன்கள் அடித்து பந்துவீச்சினை வைத்து வெற்றி பெறும் என்று நினைத்தேன். ஆனால் அந்தத் திட்டம் முற்றிலுமாக விழுந்துவிட்டது."

"எங்கே அது தவறாக சென்றது? அஸ்வின் மிக மோசமாக பந்து வீசுகிறார். அவர் மிக, மிக மோசமாக பௌலிங் செய்கிறார். அஸ்வின் அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் இருப்பாரா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. என்னை கேட்டால் அவரை அணியிலிருந்து நீக்கி விடுங்கள். ஜடேஜா அவரது உச்சத்தில் இல்லை. அஸ்வின் மிக மோசமாக பௌலிங் செய்கிறார். அவரை நிச்சயமாக நாம் அணியில் இருந்து நீக்க வேண்டும்."

"ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அதை செய்யுமா? என எனக்கு தெரியவில்லை. லக்னோ அணியில் சில இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், சிஎஸ்கே அணி இந்த அதிரடியான முடிவை எடுத்து அஸ்வினை வெளியேற்றுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. நான் எப்போதும் அஸ்வினை ஆதரித்து வந்துள்ளேன். ஆனால் இப்போது அவரை நீக்க வேண்டும்."

"அவரை இரண்டு போட்டிகளில் வெளியே உட்கார வைத்தால்தான் அவர் தனது இடத்தின் மதிப்பை உணர்வார். அதன் பின்பு அவர் இன்னும் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்" என்றார் ஸ்ரீகாந்த். தற்போது ஸ்ரீகாந்த் சொன்னது போல இரண்டு போட்டிகளுக்கு பின் மீண்டும் அஸ்வின் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்படுவாரா? அல்லது நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டாரா? என பார்க்கலாம்.

Story first published: Tuesday, April 15, 2025, 11:31 [IST]
Other articles published on Apr 15, 2025
English summary
IPL: Ravichandran Ashwin dropped from CSK after Dhoni's comments?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+