மும்பை: ஐபிஎல் தொடரில் 22வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடி வருகிறது.
நவி மும்பையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீசி வருகிறது.
சிஎஸ்கே அணியில் மாற்றம் ஏதும் பிளேயிங் லெவனில் செய்யப்படாத நிலையில், பெங்களூரு அணி 2 மாற்றம் செய்தது.

டேவிட் வில்லிக்கு பதிலாக ஹேசல்வுட்டும், ஹர்சல் பட்டேலுக்கு பதிலாக பிரபுதேசாயும் விளையாடி வருகின்றனர். அறிமுக போட்டியிலேயே அசத்தலாக பாய்ந்து ஃபில்டிங் செய்த பிரபுதேசாய், மொயின் அலியை ரன் அவுட் செய்தார். இந்த ஆட்டத்தின் போது ஆர்சிபி வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர்.
இதற்கான காரணம் தெரியாமல் பல ரசிகர்கள் முழித்தனர். ஆனால் நீங்கள் நமது தளத்தை படித்திருந்தால் உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஹர்சல் பட்டேலின் தங்கை திடீரென்று உயிரிழந்துவிட்டார். இதனால் ஹர்சல் பட்டேல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
ஹர்சல் பட்டேல் துக்கத்தில் பங்கேற்கும் வகையில் ஆர்சிபி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். தற்போது குடும்பத்துடன் இருக்கும் ஹர்சல் பட்டேல், ஆர்சிபி அணியின் அடுத்த 2 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹர்சல் பட்டேலுக்கு ஆர்சிபி செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.