கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்குக்கு 13 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 55 லட்ச ரூபாய் சம்பளம் மட்டுமே பெற்று வந்தார். தற்போது அவரை தக்க வைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு 13 கோடி ரூபாய் சம்பளம் அளித்து இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலேயே அதிக சம்பளத்துக்கு தக்க வைக்கப்பட்ட வீரராகவும் மாறி இருக்கிறார் ரிங்கு சிங். அவரது இந்த வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டு இருக்கும் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற முக்கிய வீரர்களுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அவர்களை விடவும் ரிங்கு சிங்குக்கு அதிக சம்பளம் அளித்து அவரது முக்கியத்துவத்தையும், அவருக்கு மற்ற ஐபிஎல் அணிகள் மத்தியில் இருக்கும் மதிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ரிங்கு சிங் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று வருகிறார்.
2022 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை அணியிலிருந்து விடுவித்து இருந்தது. அதன் பின்னர் அவரை ஏலத்தில் வெறும் 55 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றால் போதும் என்ற மனநிலையில் இருந்தார் ரிங்கு சிங்.
2023 ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடி தந்தார். அதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த ரிங்கு சிங், இந்திய அணியிலும் இடம் பெற்று இருக்கிறார். இதை அடுத்து அவருக்கான மதிப்பு உயர்ந்து இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை அவரை 13 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து இருக்கிறது. அவரது வளர்ச்சி மிகவும் சிறப்பானது என்றும், அவர் அதற்கு உரியவர் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.