டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் மிகப் பெரும் அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார் ரிஷப் பண்ட். தனக்கு அதிக மதிப்பும், மரியாதையும் அளித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உரிமையாளர்கள் தன் மீது சொன்ன ஒரு விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த அணியில் இருந்து விலகி இருந்தார் ரிஷப் பண்ட்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், இப்போது இருந்த கொஞ்ச, நஞ்ச மரியாதையும் போய்விட்டது. அதுவும் முதல் மூன்று போட்டிகளிலேயே தன் வாழ்நாளில் இதுவரை சந்திக்காத அளவுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளரிடம் நேரடி விமர்சனத்தை சந்தித்து வருகிறார் ரிஷப் பண்ட். அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியின் தோல்விக்கும் திட்டு வாங்கி வருகிறார்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டை வாங்கி இருந்தார். ரிஷப் பண்ட் கேப்டன்சியில் ஆடிய லக்னோ அணி இந்த முறை தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அந்தத் தோல்விகள் நடந்து முடிந்தவுடன் மைதானத்திலேயே வைத்து ரிஷப் பண்டை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் சஞ்சீவ் கோயங்கா.
இதை அடுத்து ரிஷப் பண்ட் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு டெல்லி அணியை விட்டு, லக்னோவுக்கு வந்து திட்டு வாங்கி வருவதாகவும், மரியாதையை இழந்து விட்டதாகவும் ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால், ரிஷப் பண்ட் பணத்துக்காக டெல்லி அணியை விட்டு வெளியே வரவில்லை. தன்னை விமர்சனம் செய்ததாலேயே அந்த அணியை விட்டு வெளியேறினார். ஆனால், இப்போது ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் நடு மைதானத்தில் வைத்து நூற்றுக்கணக்கான கேமராக்களுக்கு நடுவே திட்டு வாங்கி வருகிறார்.
2021 ஆம் ஆண்டு முதல் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். 2023 ஐபிஎல் தொடரின் போது அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தபோது அந்த அணியின் உரிமையாளர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு திரும்பலாம் என உறுதி அளித்தார்கள். மேலும், அவரால் விளையாட முடியாது என தெரிந்தாலும் டெல்லி அணியில் தக்க வைத்தார்கள்.
இந்த சூழ்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மீதும் சில விமர்சனங்கள் இருந்தன. 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு சில வாரங்கள் முன்பு வரை ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தான் இருப்பார் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அந்த அணியின் உரிமையாளர்களை நேரில் சந்திக்க சென்றார் பண்ட். அத்துடன் ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது.
அப்போது ரிஷப் பண்ட் தனக்கு டெல்லி அணி அதிக சம்பளம் அளிக்கவில்லை என்பதால் விலகினார் என செய்திகள் வெளியான நிலையில் அதை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களும், ரிஷப் பண்டும் மறுத்தனர். தாங்கள் சொன்ன ஒரு விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாமல் ரிஷப் பண்ட் விலகியதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்தார்.
எனவே, ரிஷப் பண்ட் பணத்துக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட்டு வெளியேறவில்லை. மரியாதை இல்லை என்ற காரணத்தால் விலகினார். பின்னர் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அவருக்காக 20.75 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டிருந்தார்.
அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பண்ட் மீது இருந்த நன்மதிப்பால் ஆர்டிஎம் முறையில் அவரை வாங்குவதற்காக முயன்றது. அப்போது அதிக தொகைக்கு ஏலம் கேட்க முடிவு செய்த சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டுக்கு 27 கோடி தந்து அவரை வாங்கினார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சம்பளத்தை பெற்ற வீரராக இருந்தார் ரிஷப் பண்ட்.
மேலும், அவரை லக்னோ அணியின் கேப்டனாகவும் அறிவித்தார் சஞ்சீவ் கோயங்கா. அப்போதே ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் எழுந்தது. ஏனெனில், 2024 ஐபிஎல் தொடரில் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கே.எல். ராகுல் கேப்டனாக சரியாக செயல்படவில்லை என நடு மைதானத்தில் வைத்து திட்டி இருந்தார் சஞ்சீவ் கோயங்கா. அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
அதை தொடர்ந்து அந்த தொடரின் முடிவில் கே.எல். ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார். அவர் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஒரு வீரராக மட்டும் இடம் பெற்று இருக்கிறார். ஆனால், அதே டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதோடு அன்று கே.எல். ராகுல் ஒரு போட்டியில் பட்ட துன்பத்தை ஒவ்வொரு போட்டியிலும் பட்டு வருகிறார்.
இது ரிஷப் பண்ட்டுக்கு அவசியம்தானா? அவர் தன்னை மதித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர்களுடனே பயணித்திருக்கலாம் என பலரும் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். இதனிடையே ரிஷப் பண்ட்டின் செயல்பாடுகளும் மோசமாகிக் கொண்டே செல்கின்றன. இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்தது. மேலும், ரிஷப் பண்ட் பேட்டிங்கிலும் சொதப்பி வருகிறார். அவர் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் மொத்தமே 17 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
இதுவும் சஞ்சீவ் கோயங்காவின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டுகின்றனர் விமர்சகர்கள். மேலும், கேப்டன்சியில் ரிஷப் பண்ட் மீது எப்போதுமே விமர்சனம் உள்ளது. இதற்கு முன்பும் இருந்துள்ளது. அதையெல்லாம் தெரிந்து தான் அவரை கேப்டனாக சஞ்சீவ் கோயங்கா நியமித்து இருக்கிறார்.
அப்படி இருந்தும் ஒவ்வொரு போட்டி தோல்விக்கு பிறகும் மைதானத்தில் வைத்து அவரை விமர்சிப்பது சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பாதி தொடரிலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அல்லது இந்த ஆண்டுடன் அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை விட்டு விலகிவிடுவார் எனவும் இப்போதே ஊகங்கள் கிளம்பத் தொடங்கி விட்டன.