முத்கல் கமிட்டி அறிக்கை 'லீக்': ஐபிஎல் பிக்ஸிங்கில் 13 வீரர்களுக்கு தொடர்பு?
டெல்லி: ஐ.பி.எல். 6வது போட்டிகளில் நிகழ்ந்த பிக்ஸிங் முறைகேட்டில் 13 வீரர்களுக்கு தொடர்பிருப்பதாக நீதிபதி முத்கல் கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
6வது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அணிகளின் நிர்வாகிகள், வீரர்கள் சிலர் சிக்கினர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
அப்போது நீதிபதி முத்கல் தலைமையில் விசாரணை கமிட்டி ஒன்றை அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த கமிட்டியும் விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இடைக்கால தலைவராக கவாஸ்கர்
இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 7வது ஐ.பி.எல். போட்டியின் போது கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 3 அணிகளுக்கு தொடர்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ஆயல்ஸ் அணிகளைத் தவிர மேலும் 3 அணிகளுக்கு பிக்ஸிங்கில் விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதாம்.

மேலும் 12 வீரர்களுக்கும் தொடர்பு
அதேபோல் பிக்ஸிங்கில் சிக்கிய 6 வீரர்கள் அல்லாமல் மேலும் 12 அல்லது 13 வீரர்களுக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

ஏப்ரல் 16-ல் விசாரணை
இந்த அறிக்கை மீது வரும் 16-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அப்போது இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications