"விடைபெறுகிறேன்".. அண்டர் 19 உலகக்கோப்பை ஹீரோ சித்தார்த் கவுல் ஓய்வு.. ஐபிஎல் புறக்கணிப்பால் முடிவு
மும்பை: சித்தார்த் கவுல் தன்னை எந்த அணியும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்காததால் ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார். வேகப் பந்துவீச்சாளரான இவர் 2008 ஆம் ஆண்டில் இந்திய அணி அண்டர் 19 உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த உலகக் கோப்பை தான் விராட் கோலியின் கேரியருக்கு அச்சாணியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சித்தார்த் கவுல் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆகி மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். வெறும் ஆறு சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் சித்தார்த், ஐபிஎல் தொடரில் 2021 வரை வாய்ப்பு பெற்று இருந்தார்.

2013 முதல் 2021 வரை ஐபிஎல் தொடரில் 54 போட்டிகளில் 58 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 8.59 ரன்கள் என்ற அளவில் விட்டுக் கொடுத்து இருக்கிறார். அவர் பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் ஐபிஎல் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
எனினும், உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தார். 2008 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். எனினும், விராட் கோலி போல சித்தார்த் கவுலுக்கு உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.
பின்னர் 2013இல் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற்றார். 2018 ஆம் ஆண்டு அவரது சிறந்த ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். ஆனால், அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்து 2021க்கு பின் ஐபிஎல் தொடரிலும் வாய்ப்பை இழந்தார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். அடுத்து தான் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களிலும், லெஜண்ட்ஸ் லீக் போன்ற தொடர்களிலும் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications