சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் 13 ஆண்டு கால சகாப்தம் முடிவுக்கு வர உள்ளது. அவர் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல இருக்கிறார். அதை உறுதி செய்யும் வகையில், அவர் வீரர்கள் பரிமாற்றத்திற்கான ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி, ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கும், சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கும் மாறவுள்ளனர். இந்த வீரர் பரிமாற்றத்திற்கு சிஎஸ்கே நிர்வாகம் முதலில் விரும்பவில்லை என்றும், கேப்டன் எம்.எஸ். தோனியின் வாரிசைக் கண்டறிய வேண்டிய 'நிர்பந்தம்' மற்றும் 'கட்டாயத்தின்' பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ஒரு தகவலை வெளியாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற விரும்புகிறார் என்ற செய்தி வெளியானபோது, அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டிய முதல் அணிகளில் சிஎஸ்கே-வும் ஒன்று. அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது, சிஎஸ்கே நிர்வாகத்தினர் சாம்சனை நேரில் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கே-விடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், சாம்சனுக்குப் பதிலாக தங்கள் அணியின் முக்கிய வீரர் ஒருவரைப் பரிமாற்றமாகத் தர வேண்டும் என ராஜஸ்தான் நிபந்தனை விதித்தது. பொதுவாக வீரர்களைப் பரிமாற்றம் செய்ய விரும்பாத சிஎஸ்கே, இந்த முறை தோனியின் ஓய்விற்குப் பிறகு அணியை வழிநடத்த ஒரு தகுதியான வீரரைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஜடேஜாவையே பரிமாற்றமாகக் கேட்டது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகமோ, பணம் மட்டுமே கொடுத்து சாம்சனை வாங்க முயற்சித்துள்ளது. ஜடேஜா, அணியின் முக்கிய வீரராக இருப்பதாலும், 2018 மற்றும் 2025 மெகா ஏலங்களில் தக்கவைக்கப்பட்டதாலும், அவரை இழக்க சிஎஸ்கே விரும்பவில்லை. மேலும், 2023 இறுதிப் போட்டியில் கடைசி பந்துகளில் அணியை வெற்றிபெற வைத்தது உட்பட, சிஎஸ்கே-வின் மூன்று கோப்பைகளில் ஜடேஜாவின் பங்கு மகத்தானது.
ஆனாலும், ஜடேஜாவைக் கொடுக்கத் தயக்கம் காட்டினால், சாம்சனை வாங்கும் வாய்ப்பு கைநழுவிப் போய்விடும் என்பதை சிஎஸ்கே உணர்ந்தது. 44 வயதான தோனி, கடந்த சில ஆண்டுகளாக முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாலும், பேட்டிங்கில் கீழ் வரிசையில் மட்டுமே களமிறங்குவதாலும், அவருக்கான சரியான மாற்று வீரராகவும், எதிர்கால கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் இருப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் நம்புகிறது. சாம்சனின் வருகை, அணியின் டாப் ஆர்டரை பலப்படுத்துவதோடு, ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் இதுகுறித்து பேசுகையில், "அணியின் நன்மைக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய நேர்ந்தால், தோனி அதைச் செய்வார். 2022-ல் ஜடேஜாவின் கேப்டன்சியின் கீழ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. தோனி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அணியின் வெற்றிக்கே முதல் முன்னுரிமை அளிப்பார். அணியை சாம்பியனாக்குவதே அவரது இலக்கு. அதற்காக ஜடேஜாவை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால், அந்த முடிவை அவர் எடுப்பார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஜடேஜாவின் வெளியேற்றம் ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருந்தாலும், அணியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நிர்வாகம் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.