ஹர்திக் பாண்டியா வேண்டுமா? அப்போ இந்த 2 பேரை கேகேஆர் தியாகம் செய்யனும்.. ஸ்ரீகாந்த் கருத்து
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள ஹர்திக் பாண்டியாவை Trade செய்வதன் மூலம் தங்கள் அணியில் இணைக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது முக்கிய வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய இருவரையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மும்பை அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டிரேட் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஐபிஎல் இடைவேளைக் காலத்தில் பல்வேறு அணிகள் அவருடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் தங்களது கேப்டனான அஜின்கியா ரஹானே ஓய்வு பெற்றதை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த வர்த்தகப் போட்டியில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், காயம் காரணமாக 2026 சீசன் முழுவதையும் தவறவிட்ட போதிலும், ஹர்ஷித் ராணா கேகேஆர் அணியின் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார். இந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் 2024 ஆம் ஆண்டில் கேகேஆர் சாம்பியன் பட்டம் வென்றபோது 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மறுபுறம், ரிங்கு சிங் 2018 சீசன் முதல் கேகேஆர் அணியுடன் பயணித்து வருகிறார். அவர் தனது அண்மைய 2026 சீசனில் 59 சராசரி மற்றும் கிட்டத்தட்ட 149 ஸ்டிரைக் ரேட்டுடன் 295 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.
இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "ரிங்கு சிங் ஒரு சுமாரான வீரர் தான், அசாதாரணமானவர் என்று எதுவும் இல்லை. ஹர்ஷித் ராணா ஒரு நல்ல பந்துவீச்சாளர். ஆனால், ஹர்திக் கேகேஆர் அணியில் இணைய விரும்பினால், நான் இவர்கள் இருவரையுமே விட்டுக்கொடுத்து விடுவேன். அவர்கள் தங்களது அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டும். ரிங்கு சிங்கை இழப்பது அவர்களுக்குப் பெரிய இழப்பாக இருக்காது.
ஹர்ஷித் ராணாவின் இழப்பு வேண்டுமானால் அவர்களுக்குப் பெரியதாக இருக்கலாம். ஆனால் ஹர்ஷித் கூட கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சிறப்பாகச் செயல்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு மட்டுமே அவர் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளுமே முறையே ஒன்பதாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

