இவங்கதான் இனி எல்லாமே.. ஐபிஎல்லை ஆட்டிப்படைக்கும் 6 பேர்.. பின்னணியில் இருக்கும் ஒரு "சுவர்"!
துபாய்: 2020 ஐபிஎல் சீசன் முழுக்க பல இளம் வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள். ஐபிஎல் சீசனில் அடையாளமே தெரியாத இளம் வீரர்கள் பலர் அசால்ட்டாக கலக்க காரணம் ஒரே ஒருவர்தான்... அது இந்திய கிரிக்கெட்டின் தூண் ராகுல் டிராவிட்!
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் இரண்டு முக்கியமான வீரர்கள்.. இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஒருவர் கிரிக்கெட் உலகின் தாதா கங்குலி. பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி தற்போது இந்திய அணிக்கு புதிய வீரர்களை கொண்டு வரவும்.. 2021 டி20 தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யவும் தீவிரமாக முயன்று வருகிறார்.
இன்னொரு பக்கம் இந்தியாவின் இளம் படையை செதுக்கி வருகிறார்.. முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் உலகின் சுவர் என்று போற்றப்படும் டிராவிட் தற்போது இந்திய கிரிக்கெட்டின் தூண்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்.

டிராவிட்
இந்தியாவின் அண்டர் 19 மற்றும் இந்திய ஏ கிரிக்கெட் அணிகளுக்கு தற்போது ராகுல் டிராவிட்தான் பயிற்சி அளித்து வருகிறார். கிட்டத்தட்ட மூன்றரை வருடமாக இந்தியாவில் மிக திறமையான வீரர்களை உருவாக்கி உள்ளார். இந்திய டொமஸ்டிக் போட்டிகளை உலக தரத்தில் மாற்றியதில் ராகுல் டிராவிட்டின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் கோப்பை
கடந்த 2018ம் வருடம் நடந்த உலகக் கோப்பை போட்டியை இந்திய ஜூனியர் அணி வென்றது. இது இந்திய அணி வெல்லும் நான்காவது உலகக் கோப்பை போட்டியாகும். இந்திய வீரர்கள் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இதில் ஒரு போட்டியில் கூட இந்திய ஜூனியர் அணி தோற்கவில்லை. இந்த தொடரில் இந்தியா வெல்ல ராகுல் டிராவிட்தான் காரணமாக இருந்தார்.

காரணமாக இருந்தார்
கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாக ராகுல் டிராவிட் இந்தியாவிற்கு இந்த உலகக் கோப்பையை வாங்கி கொடுத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் ரஞ்சி கோப்பையில் கவனம் ஈர்த்த வீரர்களை தேர்வு செய்து. அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து. கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வைத்து.. முத்து முத்தாக வீரர்களை எடுத்து அவர்களை செதுக்கி இருக்கிறார்.

பயிற்சி
கடந்த மூன்றரை வருடத்தில் இவரின் பட்டறையில் உருவாக்கி வெளியே வந்த இளம் வீரர்கள் பலர். இந்திய அணியில் இணைய இவர்கள்தான் தற்போது லைனில் காத்து இருக்கிறார்கள். அதுவும் இவரின் பயிற்சியின் கீழ் 2018ல் அண்டர் 19 டீம்மில் இருந்த ஒவ்வொரு வீரர்களும் தற்போது நம்பிக்கை அளித்து வருகிறார்கள். 2018ல் ஆடிய சுப்மான் கில், நாகர்கோட்டி, அபிஷேக் சர்மா, சிவம் மாவி ஆகியோர்தான் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்கள்.

ஐபிஎல்
இந்தியா ஏ அணி மட்டுமின்றி தற்போது ஐபிஎல் தொடரிலும் இவர்கள்தான் கலக்கி வருகிறார்கள். தற்போது ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் 6 வீரர்கள்.. ராகுல் டிராவிட்டின் பட்டறையில் தீட்டப்பட்ட வைரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுப்மான் கில் , பிரித்வி ஷா, தேவதத் படிக்கல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், நாகர்கோட்டி என்று இந்த ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார்கள் எல்லா டிராவிட்டிடம் பயிற்சி பெற்றவர்கள்.

பயிற்சி கொடுத்தார்
இந்திய அண்டர் 19 அணி மற்றும் ஏ அணிக்காக இவர்களுக்கு ராகுல் டிராவிட் பயிற்சி கொடுத்தார். இந்த ஐபிஎல் தொடர் முழுக்க இவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் பிரித்வி ஷா டெல்லி அணியை தூண் போல காத்துக் கொண்டே இருக்கிறார்.. இன்னொரு பக்கம் படிக்கல் பெங்களூர் அணிக்கு ஐபிஎல் கோப்பையை நோக்கி படிக்கல் அமைத்து வருகிறார்.

நேற்று இஷான்
நேற்று போட்டியில் சத்தமே இல்லாமல் வந்து இஷான் கிஷான் மும்பை அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றார். இன்னொரு பக்க சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல்லில் தொட முடியாத பாகுபலியாக உருவெடுத்து உள்ளார். இவர்கள் எல்லோரையும் உருவாக்கிய ஒரே நபர் ராகுல் டிராவிட்தான். இந்தியாவின் முன்னணி வீரர்கள் தோனி, கோலி, ரோஹித், பாண்டியா, ஜடேஜா எல்லாம் இந்த தொடரில் திணறுகிறார்கள்.

ஆனால் என்ன
வெளிநாட்டு வீரர்களும் கூட இந்த தொடரில் மோசமாக திணறுகிறார்கள். ஆனால் உள்ளூர் வீரர்கள்தான் இந்த தொடரையே சுவாரசியமாக மாற்றி உள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு உள்ளூர் வீரர்தான் போட்டியின் போக்கையே மாற்றி வருகிறார் . இவர்கள் எல்லோருக்கும் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக டிராவிட் பயிற்சி அளித்து வருகிறார். இவரின் கடுமையான பயிற்சியின் பலன் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் தெரிய தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications