லக்னோ: 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இராணி கோப்பையை கைப்பற்றி அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி சாதனை படைத்துள்ளது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா - மும்பை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மும்பை அணிக்கு கோப்பை அளிக்கப்பட்டுள்ளது.
இராணி கோப்பையில் மும்பை - ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது. இருந்தாலும் முதல் இன்னிங்ஸில் அடைந்த முன்னிலை காரணமாக மும்பை அணிக்கு கோப்பை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 141 ஓவர்களில் 537 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 4 சிக்ஸ், 25 பவுண்டரி உட்பட 222 ரன்களை எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக அசத்தினார். அதேபோல் அஜிங்கியா ரஹானேவும் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தொடங்கியது.
அபிமன்யூ ஈஸ்வரன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு துருவ் ஜுரெல் மட்டுமே உறுதுணையாக விளையாடினார். இதனால் 110 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்து ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய அபிமன்யூ ஈஸ்வரன் 292 பந்துகளில் 191 ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை மிஸ் செய்தார். அதேபோல் இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் 121 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 121 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி, 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் தொடங்கிய 5வது நாள் ஆட்டத்தில் மும்பை அணியின் தனுஷ் கோட்யான் - மோகித் அவஸ்தி இருவரும் 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிறப்பாக ஆடிய தனுஷ் கோட்யான் 150 பந்துகளில் ஒரு சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 114 ரன்களும், மோதி அவஸ்தி 51 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ரன்களாக இருந்தது. ஏற்கனவே 121 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், மொத்தமாக 450 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதன்பின் இரு அணி கேப்டன்களும் பேசிய நிலையில், ஆட்டம் டிரா செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மும்பை அணி 27 ஆண்டுகளுக்கு பின் இராணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் மும்பை அணி இராணி கோப்பையை வெல்வது இது 15வது முறையாகும். இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.