முகேஷ் குமார் விக்கெட் வேட்டை.. ரிஷப் பண்டுக்கு பிறந்தநாள் பரிசு.. இரானி கோப்பையை வென்ற ROI
ஸ்ரீநகர்: இரானி கோப்பையை ரிஷப் பண்ட் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்திய அணி வென்றது. பெங்கால் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், 10.4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது அபார பந்துவீச்சின் உதவியுடன், நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியனான ஜம்மு-காஷ்மீர் அணியை ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணியால் 28.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. முகேஷ் குமார் தனது விக்கெட் வேட்டையை மிகச் சிறப்பாகத் தொடங்கினார். 14-வது ஓவரின் நான்காவது பந்தில் சுபம் புண்டிரை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்த அவர், அடுத்த பந்திலேயே ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ராவை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக அதிக ரன்கள் குவித்த டோக்ரா, இந்த இன்னிங்ஸில் முகேஷின் பந்துவீச்சில் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி 'கோல்டன் டக்' முறையில் வெளியேறினார்.முகேஷின் மூன்றாவது விக்கெட்டாக விக்கெட் கீப்பர் கன்னையா வாத்வான் வீழ்ந்தார். அவரை மாற்று வீரர் ஆர்யன் ஜூயல் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து, 29-வது ஓவரின் முதல், மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் முறையே அபித் முஷ்டாக், உமர் நசீர் மிர் மற்றும் சுனில் குமார் ஆகியோரை வீழ்த்தி ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வரலாற்று வெற்றியை முகேஷ் குமார் உறுதி செய்தார்.
முகேஷ் குமாருடன் இணைந்து செயல்பட்ட அவரது பெங்கால் அணி சக வீரர் ஆகாஷ் தீப்பும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் 9 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜம்மு-காஷ்மீர் அணியின் தொடக்க வீரர்களான கம்ரான் இக்பால் மற்றும் சுபம் கஜூரியாஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், இரண்டு பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த சாகில் லோத்ராவையும் வெளியேற்றினார்.
பிப்ரவரி 2026-க்குப் பிறகு ஆகாஷ் தீப் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இ 29 வயதான இந்த வேகப்பந்து வீச்சாளர், நியூசிலாந்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் பயணிப்பதற்கு முன்னதாக, பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் அணியின் 8 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ஐந்து வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த அபார வெற்றி ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பந்த், ஞாயிற்றுக்கிழமை தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


