இராணி கோப்பை 2026: ரிஷப் பண்ட், சர்பராஸ் கான் ஏமாற்றம்.. முக்கிய பவுலர் இல்லாமல் கலக்கும் காஷ்மீர்
ஸ்ரீநகர்: இராணி கோப்பையின் முதல் நாள் ஆட்ட முடிவில், ஜம்மு காஷ்மீர் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு சுருண்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
முதல் நாளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சு கடும் சவாலாக விளங்கியது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி விளையாடாத போதிலும், மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

வேகப்பந்து வீச்சாளர்களான சுனில் குமார் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லோன் நாசிர் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். உமர் நசீர் மிர் 2 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்களான அபித் முஷ்டாக் மற்றும் சாஹில் லோத்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடக்க விக்கெட்டுகள் விரைவாக விழுந்த நிலையில், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் துணை கேப்டன் சர்பராஸ் கான் ஆகியோர் அணியை மீட்டெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொறுமையின்றி விளையாடிய ரிஷப் பந்த் 36 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, உமர் நசீர் வீசிய பந்தில் ஷார்ட் கவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய சர்பராஸ் கான் 97 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது, லெக் சைட் வீசப்பட்ட பந்தை தேவையின்றி அடிக்க முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்க்கண்ட் இடதுகை பேட்ஸ்மேன் ஷிகர் மோகன் 118 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். சர்பராஸ் கானுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு இவர் 76 ரன்கள் சேர்த்தார். அதேபோல், மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் ஸ்மரன் 83 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் 230-ஐ கடக்க உதவினார். இறுதி கட்டத்தில் ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து ரன் சேர்த்த அவர், பின்னர் லோன் நாசிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் சுபம் புந்திரைமுகேஷ் சவுத்ரியும், நைட்-வாட்ச்மேன் உமர் நசீரை ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழக்கச் செய்து ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications


