50 ஆண்டு கால டெஸ்ட் ரெக்கார்டை உடைத்த நியூசிலாந்து வீரர் பிளண்டல்.. அயர்லாந்து டெஸ்ட்டில் சாதனை
பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டல் அபாரமாக விளையாடி 186 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து விக்கெட் கீப்பர் என்ற 50 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், 6-வது வீரராக களம் இறங்கிய பிளண்டல் 292 பந்துகளைச் சந்தித்து 186 ரன்களை விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதற்கு முன்னதாக கடந்த 1976-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாரன் லீஸ் 152 ரன்கள் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் ஒருவர் வெளிநாட்டில் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையாக இருந்தது. சுமார் அரை நூற்றாண்டாக யாராலும் எட்ட முடியாத இந்த மைல்கல்லை தற்போது பிளண்டல் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து விக்கெட் கீப்பர்களின் ஒட்டுமொத்த டெஸ்ட் சாதனையை எடுத்துக்கொண்டால், பி.ஜே. வாட்லிங் முதலிடத்தில் உள்ளார். அவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 205 ரன்கள் எடுத்தார். தற்போது 186 ரன்கள் எடுத்த பிளண்டல் இந்தப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் வாட்லிங் ஆகியோருக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை விளாசிய 3-வது நியூசிலாந்து விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பிளண்டல் பெற்றுள்ளார்.
பிளண்டலின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் மட்டுமே எடுத்துத் தத்தளித்து வருகிறது. அந்த அணி தற்போது 439 ரன்கள் பின் தங்கியுள்ளது. நியூசிலாந்து வீரர்களின் இந்த ஆட்டம் அயர்லாந்து அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
