
சிக்கிய தென்.ஆ.,
அயர்லாந்து அணி எப்போது மிகப்பெரிய அணிகளுக்கு ஷாக் கொடுப்பதில் கில்லாடி தான். பரம்பரை பரம்பரையாக அவர்கள் இதனை செய்து வருகின்றனர். பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை உலகக் கோப்பை தொடரிலேயே கதற விட்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது சிக்கியிருப்பது தென்னாப்பிரிக்க அணி.

2ம் நிலை அணி
அயர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி, தலைநகர் டப்ளினில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நீங்கள் நினைப்பது போல், சகல பலம் நிரம்பிய தென்னாப்பிரிக்க அணி கிடையாது. ஓரளவுக்கு 2ம் நிலை அணி என்று கூறலாம்.

சாதாரண விஷயம் அல்ல
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆன்டி பால்பிர்னி அட்டகாசமாக விளையாடி சதமடித்தார். அவர் 117 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். ஹாரி டெக்டர் 79 ரன்கள் எடுக்க, இறுதிக் கட்டத்தில் டாக்ரெல் 23 பந்துகளில் 45 ரன்கள் விளாச, அந்த அணி 290 ரன்களை சேர்த்தது. ரபாடா, நார்ட்ஜே, ஷம்சி, ஃபெலுக்வாயோ ஆகிய பவுலர்களை சந்தித்து அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் இத்தனை ரன்கள் அடித்தது உண்மையில் சாதாரண விஷயம் அல்ல. ஆனால், இதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் வேற ரகம்.
Recommended Video

ஒருநாளில் முதல் வெற்றி
291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணியில் மலன் 84 ரன்களும், வான் டெர் டூசன் 49 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் மட்டும் எடுத்து, 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக தென்னாப்பிரிக்க அணியை அயர்லாந்து வீழ்த்தி புதிய சாதனை படைத்தது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி வரும் 16-ம் தேதி நடக்கிறது.


Click it and Unblock the Notifications











