சுப்மன் கில் இல்ல.. இந்த 31 வயது வீரர் இந்திய டி20 அணியில் இடம்பெறாததற்கு வருத்தப்பட்டு இருப்பார்-பதான்
மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறாதது அவருக்கு நிச்சயம் வருத்தத்தை ஏற்படுத்தும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத்தர Shreyas Iyer தலைமை தாங்க ஆவலுடன் உள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடந்த ஒரு கலந்துரையாடலில், ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக இந்திய டி20 அணியில் இடம் பெறாதது ஸ்ரேயஸ் ஐயருக்கு வருத்தத்தை அளிக்குமா என்று கேட்கப்பட்டபோது, இர்ஃபான் பதான் அதற்கு ஆமாம் என்று உறுதிபட பதிலளித்தார்.
இது குறித்து பேசிய அவர், "நிச்சயமாகவே இந்திய டி20 அணியில் ஒரு பகுதியாக இல்லாதது அவருக்கு வருத்தத்தை அளிக்கும். ஏனெனில் இவருக்கு அந்தத் திறமை உள்ளது என்றும், இந்திய அணியில் நடுவரிசையில் விளையாட ஒரு இடம் உள்ளது என்றும் நான் கருதுகிறேன். இதைப் பற்றி அவர் நிச்சயமாக சிந்திப்பார், ஆனால் Shreyas Iyer தான் பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வரும் அதே ஆட்டத்திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்துவார்," என்று இர்ஃபான் பதான் குறிப்பிட்டார்.
"அவர் ஒரு நிரூபிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர். ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் அவர் அணியின் முக்கிய அம்சமாக இருக்கிறார். அதேவேளையில், டி20 கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் கேப்டன்சி செய்துள்ளார், மேலும் மிகச்சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவருக்கு அபாரமான திறமை உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் காட்டியுள்ள பேட்டிங்கை மேலும் முன்னெடுத்துச் செல்ல அவர் முனைப்பு காட்டுவார்," என்று பதான் தெரிவித்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக Shreyas Iyer அதிக ரன் குவித்த வீரராக திகழ்ந்தார். அவர் 17 இன்னிங்ஸில் 175.07 ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 604 ரன்களைக் குவித்தார்.அதே விவாதத்தின்போது, பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 தொடருக்கான தங்கள் பிளேயிங் லெவனில் ஆஸ்திரேலிய வீரரான கூப்பர் கோனோலியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமா என்று இர்ஃபான் பதானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
"அவர்கள் நிச்சயமாக அவரைப் பற்றி சிந்திப்பார்கள், உள்ளூர் நிலவரங்களைக் கருத்தில் கொண்டு. இருப்பினும், இந்த நிலவரங்களில் கூப்பர் கோனோலி உலகக் கோப்பையில் எப்படி விளையாடினார் என்பதையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். போட்டிகள் இலங்கையில் நடந்தன, மேலும் நீங்கள் நல்ல ஆட்டத்தை எதிர்பார்த்தீர்கள், ஆனால் அவரது செயல்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை," என்று பதான் பதிலளித்தார்.
"இருப்பினும், இடது கை சுழற்பந்து வீசவும், பேட் செய்யவும் அவரால் முடியும் என்பதால், உங்களிடம் அந்த வாய்ப்பு இன்னும் உள்ளது. பிக்பாஷ் லீக்கில் மைதானங்கள் வேறுபடுகின்றன. அங்கே அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார், ஒரு வருடம் மட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளாக. அவர் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். ஆனால், இங்கே அவருக்கு சவால் வேறு விதமாக இருக்கும்," என்று பதான் கூறினார்.
ஐபிஎல் 2026 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கூப்பர் கோனோலியை ₹3 கோடிக்கு வாங்கியது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீரரான இவர், இதுவரையிலான 52 டி20 போட்டிகளில் 132.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 870 ரன்களையும், 7.46 எக்கனாமி ரேட்டில் 30 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications