கொழும்பு : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், பாகிஸ்தான் அணியை சீண்டும் வகையில் சூசகமாக ஒரு ட்வீட் பதிவிட்டு இருக்கிறார்.
2023 ஆசிய கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆடுவது தான் இந்திய அணிக்கு நல்லது. இல்லையென்றால் இது ஒரு தலைபட்சமான ஆட்டமாக இருக்கும் என இர்பான் பதான் பதிவிட்டுள்ளார். இதில் எங்கே அவர் பாகிஸ்தான் அணியை பற்றி சொல்கிறார் என்றே முதலில் தோன்றும். ஆனால், உற்று கவனித்தால் அது புரியும். எப்படி?
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு துவக்கத்தில் இருந்தது. சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் முன்னேறின.
சூப்பர் சுற்றில் இந்திய அணி மற்றும் இலங்கை அணிகள் தலா இரண்டு வெற்றிகளை பெற்று இறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான் அணி முதலில் இந்திய அணியிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.
அத்துடன் அந்த அணி தொடரில் இருந்தே வெளியேறியது. ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தால், இந்திய அணியுடன் மோத வேண்டி இருக்கும். அப்படி ஒரு போட்டி நடந்தால் அதில் இந்தியா எளிதாக வென்று விடும். அது ஒரு தலைபட்சமான போட்டியாக இருக்கும் என்பதையே இர்பான் பதான் சூசகமாக கூறி இருக்கிறார்.
முன்னதாக குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் எடுத்தது. அதன் பின் மழையால் போட்டி நடைபெறவில்லை. அப்போதும் இர்பான் பதான் பாகிஸ்தான் அணியை சீண்டும் வகையில், பக்கத்து நாட்டில் பல டிவிக்கள் இன்று தப்பித்தன என குறிப்பிட்டு இருந்தார். அதாவது, அந்தப் போட்டி மழையால் கைவிடப்படவில்லை என்றால் பாகிஸ்தான் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்திருக்கும். அப்படி நடந்தால் பாகிஸ்தான் நாட்டில் பலர் தங்கள் தொலைக்காட்சியை உடைத்து இருப்பார்கள் என கூறி சீண்டி இருந்தார் பதான்.