Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"2 வருடம் ஒழுங்கா ஆடலைனா பரவாயில்லை ஆனா" கோலியை விமர்சித்தது குறித்து இர்பான் பதான் விளக்கம்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி, கடந்த ஐந்து ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில், சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். அவரது ஃபார்ம் சரிவு குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறிய கருத்துகள், கோலி ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

"கோலியை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?" என்று எழுந்த கேள்விகளுக்கு, இர்பான் பதான் தற்போது விளக்கமளித்துள்ளார். விராட் கோலிக்கு தான் முதலில் ஆதரவு தெரிவித்த போதும் இப்போது ஏன் தான் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி வந்தது? என இர்பான் பதான் விளக்கி இருக்கிறார்.

Irfan Pathan Hits Back at Fans It s My Duty to Criticize Kohli Says Five-Year Slump is Unacceptable

"ஆரம்பத்தில் நான்தான் ஆதரவு கொடுத்தேன்"

சமீபத்தில் இதுபற்றி ஒரு நேர்காணலில் பேசிய இர்பான் பதான், "விராட் கோலியின் சரிவு 2019-20 காலகட்டத்தில் தொடங்கியபோது, அவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் நானும் ஒருவன். அது கொரோனா காலம், ஒரு பெரிய வீரர் தனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு சரிவைச் சந்திக்கும்போது, நாம் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று நான் நம்பினேன். எனது சமூக வலைதளப் பக்கங்களைப் பார்த்தால் தெரியும், நான் அவருக்கு அதிக ஆதரவளித்தேன். அதற்கு அவர் தகுதியானவர், இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்" என்று கூறினார்.

"5 வருட சரிவு என்பது சரியல்ல"

ஆனால், தனது விமர்சனத்திற்கான காரணத்தை விளக்கிய பதான், "ஒரு சரிவு என்பது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நீடிக்கலாம். ஆனால், அதுவே ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்தால், அது சரியல்ல. இறுதியில், அணிதான் முதன்மையானது. நாம் அணிக்காக விளையாடுகிறோம், போட்டிகளை வெல்வதற்காக விளையாடுகிறோம். ஒரு வீரரின் சரிவு ஐந்து ஆண்டுகள் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஒரே மாதிரி அவுட்.. அதுதான் பிரச்சனை!

விராட் கோலியின் பேட்டிங்கில் இருந்த தொழில்நுட்பப் பிரச்சனையையும் பதான் சுட்டிக்காட்டினார். "டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் பிரச்சனை என்னவென்றால், அவர் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக ஆட்டமிழந்து கொண்டிருந்தார். பந்து ஸ்லிப் திசையிலோ அல்லது விக்கெட் கீப்பரிடமோ எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு பேட்ஸ்மேன் ஒரே முறையில் தொடர்ந்து ஆட்டமிழந்தால், எதிரணிக்கு காரியம் எளிதாகிவிடும். அவர்கள் தங்களது திட்டம் 'ஏ'-விலேயே உறுதியாக நிற்பார்கள்."

"ஒரு சாம்பியன் வீரர் என்பவர், எதிரணியைத் திட்டம் 'ஏ'-விலிருந்து திட்டம் 'பி'-க்கு மாறச் செய்ய வேண்டும். ஆனால், கோலியிடம் அது நடக்கவில்லை. அவர் ஒரு சாம்பியன் வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்தத் தவறு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றி ஒரு வர்ணனையாளராக நான் விளக்கமாகப் பேசித்தான் ஆக வேண்டும்" என்று இர்பான் பதான் குறிப்பிட்டார்.

ரசிகர்களுக்குத்தான் என் பொறுப்பு, வீரர்களுக்கு அல்ல!

தனது வர்ணனையாளர் பணி குறித்துப் பேசிய இர்பான் பதான், "ஒரு வர்ணனையாளராக, என் பொறுப்பு ரசிகர்களுக்கு உண்மையைச் சொல்வதுதான், வீரர்களுக்கு அல்ல. ஒரு வீரர் சிறப்பாகச் செயல்பட்டால், அவரைப் பாராட்ட வேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அதை விமர்சிக்க வேண்டும். களத்தில் என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது, அடுத்து என்ன நடக்கலாம் என்பதை ரசிகர்களுக்கு விளக்குவதுதான் என் வேலை" என்று தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

Story first published: Sunday, August 17, 2025, 14:13 [IST]
Other articles published on Aug 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+