
முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்பு
சாலை பாதுகாப்பை சர்வதேச அளவில் அறிவுறுத்தி சாலை பாதுகாப்பு உலக தொடர் கடந்த மாதத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சர்வதேச அளவில் 6 அணிகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி இந்திய மற்றும் இலங்கை ஜாம்பவான்கள் இடையில் நடைபெற்றது.

சச்சினுக்கு கொரோனா பாதிப்பு
இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தொடர் முடிந்த சில தினங்களில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார்.

தனிமைப்படுத்திய வீரர்கள்
இதையடுத்து சாலை பாதுகாப்பு தொடரில் பங்கேற்ற முன்னாள் வீரர்கள் யூசுப் பதான் மற்றும் பத்ரிநாத்திற்கும் அடுத்தடுத்த தினங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் இதுகுறித்து தங்களது டிவிட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளதுடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் அறிவிப்பு
இந்நிலையில் சாலை பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற இர்பான் பதானுக்கும் தற்போது கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர் இந்த தொடரில் பங்கேற்று கொரோனா பாதித்துள்ள 4வது வீரர். இவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் அச்சம்
இதையடுத்து அந்த தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களும் தற்போது அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த தொடரில் ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. தன்னோடு தொடர்பை ஏற்படுத்தியவர்கள் பரிசோதனை மேற்கொள்ள யூசுப் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











