இந்திய அணிக்கு தோல்வி மேல் தோல்வி.. உடனே ஆர்சிபி நாயகனை டி20 அணியில் சேருங்க.. இர்ஃபான் பதான் யோசனை
மும்பை: அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் பிசிசிஐ மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 என முழுமையாகத் தோற்று அதிர்ச்சி அளித்த இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 191 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள இர்ஃபான் பதான், "தற்போது இந்திய டி20 அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ளனர். எனவே, வலதுகை பேட்ஸ்மேனான ரஜத் படிதாரை அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ சிந்திக்க வேண்டும். அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால், ரஜத் படிதாருக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கி பரிசோதனை செய்து பார்க்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகாத 32 வயதான ரஜத் படிதார், உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறந்த சாதனையை வைத்துள்ளார். அவர் 106 இன்னிங்ஸ்களில் 160.08 ஸ்டிரைக் ரேட்டுடன் 3,389 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தி 2026 ஐபிஎல் தொடர் உட்பட அடுத்தடுத்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்து சிறந்த கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

