மும்பை: 2026 டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியின் ஆலோசகராக வருமாறு முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான தகவல்கள், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, தோனியைக் கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பைக்கு தோனியை ஆலோசகராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு முன், 2021 டி20 உலகக் கோப்பையின்போதும் தோனி இதே பதவியில் இருந்தார். ஆனால், அந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடனேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்த வதந்திகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மனோஜ் திவாரி, "முதலில், கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதே பெரிய கேள்வி. அதெல்லாம் சரி, அவருக்கு போன் செய்தார்களே, 'அவர் போனையாவது எடுத்தாரா?' அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்வதே மிகக் கடினமான விஷயம். அவர் யாருடைய மெசேஜுக்கும் அவ்வளவு சீக்கிரம் பதில் அனுப்ப மாட்டார் என பல வீரர்கள் கூறியுள்ளனர். அவர் மெசேஜை படித்தாரா இல்லையா என்பதே நமக்குத் தெரியாது" என்று நையாண்டியாகக் கூறினார்.
தோனி ஒருவேளை இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டால், தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து அவர் எப்படிச் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தோனி மற்றும் கம்பீர் இடையேயான உறவுமுறை பல ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இருவரும் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தாலும், அந்த வெற்றிக்கு தோனியின் சிக்ஸருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கம்பீர் பலமுறை வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய திவாரி, "ஒரு வீரராகவும், கேப்டனாகவும் தோனியின் அனுபவம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அவருக்கு இளம் வீரர்கள் மத்தியில் பெரும் மரியாதை இருக்கிறது. ஆனால், அதைவிட முக்கியம், எம்.எஸ். தோனி மற்றும் கௌதம் கம்பீர் இருவரும் எப்படி இணைந்து செயல்படப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பதுதான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், பிசிசிஐ-யின் இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.