CSK vs LSG: ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இவருக்கு ஆட்டநாயகன் விருதா? தோனி சொன்னது என்ன?
லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வித்தியாசமான முறையில் வீழ்த்தியது. இதை அடுத்து அதிரடியாக விளையாடிய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், நூர் அகமதுவுக்கு ஆட்டநாயகன் விருதை வழங்கி இருக்கலாம் என்றும், தனக்கு ஏன் வழங்கினார்கள் என்றும் தோனி கூறியிருந்தார்.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், நூர் அகமது ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஆனாலும் அவருக்கு ஆட்டநாயகன் விருதை வழங்கி இருக்கலாம் என்றும், அவர்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்றும் தோனி குறிப்பிட்டுச் சொன்னார். விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை விட நூர் அகமது எந்த வகையில் சிறப்பாக செயல்பட்டார் என்று பார்க்கலாம்.

இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலீல் அகமது மற்றும் மொயீன் அலி பந்து வீசினார்கள். அவர்கள் ஆரம்பத்தில் சற்று அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். பின்னர் மொயீன் அலி கட்டுக்கோப்பாக பந்து வீசினார்.
அதன் பிறகு ஜேமி ஓவர்டன் மற்றும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு செய்தனர். எய்டன் மார்கிரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஆட்டம் இழந்த நிலையில், நூர் அகமது ஒன்பதாவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். அடுத்து அவர் 11-வது ஓவரை வீசியபோது வெறும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அடுத்து 15-வது ஓவரை அவர் வீசியபோது நான்கு டாட் பால்களையும் இரண்டு ஒற்றை ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அந்த ஓவரில் ரிஷப் பண்ட் நூர் அகமதுவின் பந்துவீச்சில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அடுத்து 17-வது ஓவரை நூர் அகமது வீசியபோது ரிஷப் பண்ட் அந்த ஓவரில் தொடர்ந்து நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் திணறினார். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன் சேர்த்தார்.
அந்த ஓவரில் அப்துல் சமத் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தார். இந்த ஓவரில் மொத்தம் மூன்று ரன்கள் மட்டுமே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எடுத்தது. நூர் அகமது வீசிய நான்கு ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். ஒரு பவுண்டரி கூட விட்டு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல டாட் பால்களையும் வீசி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அவர் ஏற்படுத்திய அழுத்தத்தால் அவருடன் இணைந்து பந்து வீசிய மற்ற சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தன. அதைத்தான் தோனி சுட்டிக்காட்டி இருக்கிறார். நூர் அகமது தான் இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றார்.சிஎஸ்கேவின் பந்துவீச்சில் கலீல் அகமது மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். ஆனால், அவர்களை விட ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத நூர் அகமது அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதே உண்மை. பின்னர் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.


Click it and Unblock the Notifications