இதென்ன புது புரளி... பெயரை மறந்தது குத்தமா? - தீயா மோதும் ஆஸி., - இங்கிலாந்து ஃபேன்ஸ்
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், களத்தில் ஆக்டிவாக இருக்கிறார்களோ இல்லையோ, சமூக தளங்களில் படு ஆக்டிவாக உள்ளனர். அப்படி இந்த கொரோனா காலத்தில் தன்னை ஆன்லைனில் பிஸியாக வைத்திருப்பவர் பேட் கம்மினஸ். அவர் தனது சிறந்த டெஸ்ட் அணியில் மூன்று முக்கிய வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளார். அதில், ஒரு வீரரின் பெயர் விடுபட பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.
இன்றைய மாடர்ன் கிரிக்கெட் உலகத்தில் எத்தனை பேட்ஸ்மேன்கள் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். செஞ்சுரிகள் அடிக்கலாம். ஆனால், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இணையாக அவர்களால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கோலோச்ச முடியுமா என்றால், அது சந்தேகம் தான்.
91 டெஸ்ட் போட்டிகளில், 52க்கும் அதிகமான ஆவரேஜுடன் 7490 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில், 254 போட்டிகளில், 59 எனும் மெகா ஆவரேஜுடன் 12,169 ரன்கள் எடுத்துள்ளார். டி 20 போட்டிகளில், 89 போட்டிகளில் 31,59 ரன்கள் விளாசியுள்ளார்.

சிறந்த டெஸ்ட் அணி
கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் நிறுத்தப்பட்ட பின், மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இப்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், பேட் கம்மின்ஸ் தனது யூடியூபில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர், 'உங்களுடைய சிறந்த டெஸ்ட் அணியின் மூன்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமெனில், யாரை தேர்வு செய்வீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

5வது வீரர்
இதற்கு தனது அணியின் மூன்றாம் நிலை வீரராக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பெயரை தெரிவித்த கம்மின்ஸ், 4வது வீரராக ஸ்டீவன் ஸ்மித் பெயரை தெரிவித்தார். பிறகு, 5வது ஸ்பாட்டுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பெயரை தெரிவித்தார். இதில், ஆர்டர் மாறுபட்டாலும், இந்த மூன்று வீரர்களை நான் கட்டாயம் தேர்வு செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

எப்படி தவிர்க்கலாம்?
கம்மின்ஸ் என்னமோ குத்துமதிப்பாக மூன்று வீரர்களின் பெயர்களை சொல்லிவிட்டுச் சென்றாலும், ரசிகர்கள் வேறு ஒரு வடிவத்தில் ஒரு புது பிரச்னையை கிளப்பிவிட்டுள்ளனர். அதாவது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெயரை அவர் சொல்லவில்லையாம். அதெப்படி, உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜோ ரூட் பெயரை அவர் தவிர்க்கலாம் என்று கொந்தளிக்கின்றனர் சில ரசிகர்கள்.

வாய்க்கா தகராறு
பரம்பரை, பரம்பரையாக இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வாய்க்கா தகராறு இருந்து வரும் நிலையில், வேண்டுமென்றே ஜோ ரூட் பெயரை கம்மின்ஸ் தவிர்த்திருப்பதாக சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர். எது எப்படியோ.. இரு அணிகளுக்கும் இடையேயான தீரா பகை கொண்ட ஆஷஸ் தொடர், வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் சூழலில், அதன் தகதக சூழலுக்கு இப்போதே ஆஸ்திரேலியா பிள்ளையார் சுழி போட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications