Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB: ஆர்சிபி-யின் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் தடை செய்யப்பட்டதா? நீதிபதி சொன்னது என்ன?

பெங்களூர்: 2025 ஐபிஎல் கோப்பையை வென்ற சந்தோஷம் மறைவதற்குள், ஆர்சிபி அணிக்கும், அதன் கோட்டையான சின்னசாமி ஸ்டேடியத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதம், இப்போது பெங்களூரு மைதானத்திற்கே தடை விதிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் காண முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்தது என்ன?

சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடுவதற்காக ஜூன் 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 அப்பாவி ரசிகர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Is RCB s Chinnaswamy Stadium Banned Legal Action Looms After Stampede Tragedy

நீதிபதி அறிக்கையில் பகீர் தகவல்கள்

இந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை கர்நாடக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தனது விசாரணையை முடித்து, அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், இந்த விபரீதத்திற்கு ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிஎன்ஏ நெட்வொர்க்ஸ் ஆகியோரின் மொத்த அலட்சியமே காரணம் என்று கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த சரியான திட்டமிடல் இல்லை, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, அனுமதி வாங்குவதில் குளறுபடிகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் அதிரடி முடிவு

நீதிபதி டி'குன்ஹா அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட கர்நாடக அமைச்சரவை, குற்றம் சாட்டப்பட்ட ஆர்சிபி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் டிஎன்ஏ நிறுவனம் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் மெத்தனம் காட்டியதாகக் கூறி, 5 மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சின்னசாமி ஸ்டேடியம் தடை செய்யப்படுமா?

நீதிபதி தனது அறிக்கையில், சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பாதுகாப்பானது அல்ல என்றும், தகுதியற்றது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் 2026 சீசனில் போட்டிகளை நடத்த சின்னசாமி ஸ்டேடியத்திற்கு தடை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது நடந்தால், ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தின் ஆதரவு இல்லாமல் மற்ற ஊர்களில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆர்சிபி அணிக்கு தடையா?

தற்போதைய சூழலில், ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனால், அந்த அணி நிர்வாகம் கிரிமினல் வழக்குகளை சந்திக்க உள்ளது. ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி அணி இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது, அந்த அணியின் கோடிக்கணக்கான ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Friday, July 25, 2025, 12:37 [IST]
Other articles published on Jul 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+