பழிக்கு பழி வாங்கும் பாகிஸ்தான்.. உலகக்கோப்பையை நடத்தும் உரிமையை இழக்கும் இந்தியா.. ரசிகர்கள் கவலை!
மும்பை: உலகக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவின் கையை விட்டு போவதற்கான அபாயம் உருவாகியுள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தது.
இதற்காக இந்திய அணியும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்வாங்கிய பிசிசிஐ
ஆனால் நேற்று திடீரென பிசிசிஐ அதிர்ச்சி கொடுத்தது. பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செல்ல விரும்பவில்லை என அறிவித்தார். இதுமட்டுமல்லாமல், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்தாமல் வேறு பொது இடங்களில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்தது.

பாக். பதிலடி
இந்நிலையில் பிசிசிஐ-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்திய அணி ஒருவேளை பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இருந்து பாகிஸ்தான் விலகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இனி ஆசிய கோப்பை தொடரில் முன்னணி அணியான பாகிஸ்தான் விளையாடாது.

இந்தியாவுக்கு பிரச்சினை
இதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கு உலகக்கோப்பையிலும் சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது அடுத்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமை இந்தியாவிடம் தான் உள்ளது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது எனவும், விலகுவதாகவும் முடிவெடுத்துள்ளது. இப்படி நடந்தால் உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பே இந்தியாவை விட்டு போகலாம்.

ஏன் தெரியுமா?
பாகிஸ்தான் போன்ற முன்னணி அணி, இந்தியாவுக்கு செல்ல மறுத்தால் உலகக்கோப்பையை தொடரை வேறு எங்கேயாவது நடத்துவதற்கு தான் ஐசிசி ஏற்பாடு செய்யும். இதற்கேற்றார் போல பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இதே கோரிக்கையை வைத்து வருகின்றனர். இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications