பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் இறந்த நிலையில், விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என சில ஊடகங்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கூறி வருகின்றனர். உண்மையிலேயே விராட் கோலி இந்த விஷயத்தில் தவறு செய்திருக்கிறாரா? அல்லு அர்ஜுனை கைது செய்தது போல விராட் கோலியையும் கைது செய்ய வேண்டும் என சிலர் ஒப்பிட்டுக் கூறுவது சரியா? அல்லு அர்ஜுன் விவகாரத்தில் நடந்தது என்ன, விராட் கோலி விவகாரத்தில் நடந்தது என்ன என்று பார்க்கலாம்.
முதலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெறும் 18 மணி நேர இடைவெளியில் பிரம்மாண்ட வெற்றி விழாவை நடத்த வேண்டும் என நினைத்தது. அதுதான் அத்தனை அவசரத்திற்கும், 11 பேர் உயிரிழந்ததற்கும் மூல காரணமாக அமைந்தது. அந்த முடிவை எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தான்.
விராட் கோலி தனிப்பட்ட முறையில் இந்த விழாவை நடத்தியே ஆக வேண்டும் எனக் கூறியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஏனெனில், அவர் இறுதிப் போட்டியில் வெல்வது பற்றித்தான் அதுவரை நினைத்துக் கொண்டிருந்திருப்பார். இறுதிப் போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே, அடுத்த நாள் பெங்களூருவில் வெற்றி விழா நடத்தப்படும் என்ற அறிவிப்பை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டது. எனவே, இந்த முடிவை எடுத்ததில் விராட் கோலிக்கு இருக்கும் பங்கு எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி உள்ளது.

அப்படியே இந்த முடிவில் விராட் கோலி சில ஆலோசனைகளை அளித்திருந்தாலும், ஏற்பாடுகளை 'டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற அமைப்புதான் செய்துள்ளது. ரசிகர்கள் அதிகம் கூடியிருந்தபோது, அவர்கள் நிச்சயம் காவல்துறையினரை அழைத்து தங்களது திட்டங்களை விவரித்து, அதை எப்படி பாதுகாப்பாக செயல்படுத்துவது என ஆலோசனைகளை நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால், 11:56 மணிக்கு பெங்களூரு நகர காவல் துறை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது என அறிவித்தது. ஆனால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் ஊர்வலம் நடத்தப்படும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியானது. இதிலிருந்து, காவல்துறையினரின் ஆலோசனைகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கேட்கவில்லை என நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, இங்கே தவறு செய்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே, அந்த அணியின் வீரர் விராட் கோலி அல்ல.
நிச்சயமாக, விராட் கோலிக்கு பெங்களூரு நகரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, எத்தனை ரசிகர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள் என்ற தகவல்கள் முழு அளவில் தெரிந்திருக்காது. அவர் விமான நிலையத்திலிருந்து நகரத்திற்குள் பேருந்தில் வந்தபோது, தனது கண்களால் சாலைகளில் இருந்த ரசிகர்களைத்தான் பார்த்திருப்பார்.
சின்னசாமி மைதானத்தின் வெளியே 11 பேர் இறந்து இருக்கிறார்கள், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என செய்தி ஊடகங்கள் அலறிக்கொண்டிருந்த நேரத்தில், உள்ளே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி விழா நடந்தது. விராட் கோலி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக பேசியதாக பலரும் வீடியோக்களை வெளியிட்டு குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற விவரம் ஊடகங்களை விட, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு நன்றாகவே தெரியும். அவர் இந்த நிகழ்ச்சியை அப்போதே ரத்து செய்யுமாறு ஆர்சிபி அணிக்கு உத்தரவிட்டிருக்கலாம். அவரது உத்தரவை மீறி அங்கு யாரும் எதுவும் செய்திருக்க முடியாது.
ஆனால், அவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியை விரைவாக முடிக்குமாறுதான் அவர்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார். அதைத்தான் ஆர்சிபி நிர்வாகமும் தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. எனவே, இதில் விராட் கோலியை குற்றம் சொல்வதற்கு முன்பு, கர்நாடக மாநில துணை முதல்வர் ஏன் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை என்ற கேள்வியைத்தான் நாம் கேட்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த வெற்றி விழாவிலேயே ரசிகர்களை அமைதியாக, பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லுமாறும், இறந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து இருக்க வேண்டும்.
அங்கு கூடிய ரசிகர்கள் அனைவரும் விராட் கோலியை பார்க்கத்தான் வந்தார்கள் என்பது உண்மைதான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகளை செய்தது ஒரு தனியார் நிறுவனம். அதற்கு ஒத்துழைப்பு அளித்தது அரசு இயந்திரம். இதில் கர்நாடக அரசுக்கு அதிக பொறுப்பு உள்ளது. அங்கு நிலைமை எல்லை மீறி செல்கிறது என்றால், அவர்கள் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து இருக்கலாம். நிகழ்ச்சியை நடத்த அனுமதித்துவிட்டு, எல்லை மீறி செல்லும்போது அவற்றை வேடிக்கை பார்த்துவிட்டு இறுதியில் விராட் கோலி மீது பழியை போட முடியாது.
இது ஒருபுறம் இருக்க, அல்லு அர்ஜுனை கைது செய்தது போல விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, சிறிய திரையரங்கம் ஒன்றுக்கு ரசிகர்களுடன் படத்தை பார்ப்பதற்காக சென்றார். அங்கு அவரது வருகை குறித்து பல்வேறு பில்டப்புகளும் செய்யப்பட்டன.
அங்கு எந்த தனியார் நிறுவனமும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் வரும்போது அங்கு கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே சுமார் ஒரு மணி நேரமாக அல்லு அர்ஜுன் வருவதாக அங்கு பில்டப் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் முதலில் வந்தனர். அதன் பிறகு சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் வந்து சேர்ந்தார்.
தன்னை சுற்றி ரசிகர் கூட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்தார். அதன் பிறகு அவர் உள்ளே சென்ற போதுதான் ஒரு பெண் கூட்டத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அப்போது உள்ளே அல்லு அர்ஜுன் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் ரசிகை ஒருவர் இறந்துவிட்டார் என அல்லு அர்ஜுனிடம் தெரிவித்தும், அவர் திரையரங்கை விட்டு வெளியே வர மறுத்தார். இது அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரே அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அல்லு அர்ஜுனின் நேரடித் தொடர்பு உள்ளது.
ஆனால், இங்கு விராட் கோலியின் நேரடித் தொடர்பு என்பது எந்த அளவுக்கு இருந்தது என்பது நமது கேள்வி. மேலும் அல்லு அர்ஜுனை கைது செய்ததால் எந்த மாற்றமும் நடக்கவில்லை. அவர் சில மணி நேரத்தில் வெளியே வந்து விட்டார். பெங்களூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் விராட் கோலிக்கு முன் பலருக்கும் அதிக பொறுப்பு உள்ளது.
அவர்கள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த மார்க்கெட்டிங் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கர்நாடக அரசு அதிகாரிகள் சிலர் இந்த சம்பவத்திற்கான தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இதில் விராட் கோலியை கைது செய்வதன் மூலம் நியாயம் கிடைத்துவிடுமா என்ற கேள்வி உள்ளது. ஆனால், இனி விராட் கோலியோ அல்லது எந்த ஒரு கிரிக்கெட் வீரரோ தங்களது பெயரை வைத்து கூட்டம் கூட்டப்பட்டால், அது சரியாக நடக்கிறதா என்பதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். மீண்டும் இது போன்ற ஒரு அசம்பாவித சம்பவம் நடந்தால் அப்போது அதை யாராலும் மன்னிக்க முடியாது.