ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதுவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடும் அறிமுகப் போட்டியிலேயே இஷான் கிஷன் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. உப்பல் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இஷான் கிஷன் 47 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். 11 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

இந்த ஆட்டம் மூலம் இஷான் கிஷன் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். மேலும், ஐபிஎல் தொடரில் இதுவே இஷான் கிஷனுக்கு முதல் சதமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை துவைத்து எடுத்த இஷான் கிஷன் வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 20 பந்துகளிலேயே சதத்தை எட்டினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இதற்கு முன்பு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே சதங்கள் அடித்திருந்தனர். டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், ஹெய்ன்ரிச் கிளாஸன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக் ஆகியோர் மட்டுமே அந்த சாதனையை செய்திருந்தனர். இந்தநிலையில், தற்போது இஷான் கிஷன் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. தன் மீது வைத்த நம்பிக்கையை காக்கும் வகையில் இஷான் கிஷன் முதல் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்துள்ளார். இது அவருக்கு மூன்றாவது ஐபிஎல் அணியாகும்.
2016ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமான இஷான் கிஷன், 2017 வரை அந்த அணியில் இருந்தார். பின்னர் 2018ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்ற அவர் 2024 வரை அந்த அணியில் இடம் பெற்று சிறப்பாக ஆடினார்.
தனது அபாரமான ஐபிஎல் ஆட்டத்தால் 2021ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார் இஷான் கிஷன். சர்வதேச கிரிக்கெட்டிலும் பல்வேறு அதிரடி ஆட்டங்களை ஆடி இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2023ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் இடையே வெளியேறிய இஷான் கிஷன், அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இந்திய அணி நிர்வாகம் அவரை ஒதுக்கியது. மேலும், பிசிசிஐயின் ஒப்பந்தத்தையும் அவர் இழந்தார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த அவர், ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டியிலேயே அதிர வைத்துள்ளார்.
செய்தி சுருக்கம்: