மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தற்போது ரிஷப் பந்த் இல்லாததால் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த இடத்தில் கே எஸ் பரத் இருந்தாலும் அவர் பேட்டிங்கில் சரிவர விளையாடுவதில்லை.
சாகாவுக்கு வயது மூப்பு காரணத்தைக் காட்டி தேர்வு குழுவினர் நிராகரித்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த இடத்திற்கு வரக்கூடியவர் என்றால் அது இஷான் கிஷான் தான்.

இடது கை பேட்ஸ்மேன் ஆன இசான் கிஷன், ரிஷப் பண்ட் போல அதிரடியாக ஆடக்கூடிய திறமை உடையவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமும் அடித்திருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் சதமும் அவர் அடித்திருக்கிறார். ஆனால் இசான் கிஷன் தொடர்ந்து தனது பார்மை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடியது கிடையாது.
ஒரு ஆட்டத்தில் விளையாடினால் அடுத்த ஆட்டத்தில் அவர் சொதப்பி விடுகிறார். இந்த நிலையில் இம்மாத இறுதியில் துலீப் கோப்பையை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிராந்தியமாக பிரிக்கப்பட்டு 6 அணிகள் தங்களுக்குள் விளையாடும். இதில் கிழக்குப் பிராந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இசான் கிஷன் சேர்க்கப்பட்டார். ஆனால் இசான் கிஷன், இந்த தொடரில் தாம் விளையாட விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம்.

இது குறித்து தேர்வுக்குழு வெளியிட்டுள்ள தகவலின் படி இஷான் கிஷனுக்கு காயம் ஏதும் இல்லை என்றும் ஆனால் இந்த தொடரில் விளையாடுவதற்கு தமக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டதாக கூறியுள்ளார். இசான் கிஷனின் இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு வாய்ப்பு உள்ள நிலையில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இசான் கிஷன் வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்பதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் என்பதால் அணியில் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா எப்படியாவது இந்திய அணியில் சேர்த்து விடுவார் என்ற காரணத்தினால் இஷான் கிசன் இது போன்ற முக்கியமான தொடர்களில் விளையாட யோசிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் தெற்கு பிராந்திய அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.