இஷான் கிஷனுக்கு வாழ்வு கொடுத்த 3-வது அம்பயர்.. வேதனையில் சிரித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு 3-வது அம்பயர் நாட் அவுட் வழங்கிய விவகாரம் மைதானத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 172 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்தது.
ஆட்டத்தின் 11-வது ஓவரின் 5-வது பந்தை ஷமர் ஸ்பிரிங்கர் வீசினார். அப்போது இஷான் கிஷன் டீப் கவர் திசையை நோக்கி பந்தை அடித்தார். அங்கே எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்றிருந்த ஃபீல்டர் மேத்யூ போர்ட், சற்று தாமதமாக ஓடிவந்து முன்னோக்கி டைவ் அடித்து பந்தைப் பிடித்தார். மேத்யூ போர்ட் பந்தைப் பிடித்த விதம் அவுட் போலவே இருந்ததால், இணையதள நேரலை ஸ்கோர்போர்டுகளில் கூட இஷான் கிஷன் அவுட் என்றே சில நொடிகள் பதிவானது. ஆனால் கேட்ச் சரியாகப் பிடிக்கப்பட்டதா என்பதை அறிய கள அம்பயர்கள் 3-வது அம்பயரின் உதவியை நாடினர்.

தொலைக்காட்சி ரீப்ளேவை பல கோணங்களில் மெதுவாக ஆய்வு செய்தபோது, மேத்யூ போர்ட் தரையில் விழுந்த நொடியில் அவரது விரல்கள் பந்தின் கீழ் முழுமையாக இல்லை என்பது போலவு, பந்து தரையில் பட்டது போலவும் இருந்தது. முழுமையாக உறுதிப்படுத்த முடியாத நிலையில் 3-வது அம்பயர் இஷான் கிஷனுக்கு நாட் அவுட் எனத் தீர்ப்பளித்தார்.
அம்பயரின் இந்த அறிவிப்பால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தாலும்,சிரித்து புன்னகையுடன் அதை கடந்தனர். தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நெருக்கடியான சூழலில், அம்பயரின் இந்த முடிவு இந்திய அணிக்குக் கிடைத்த வாய்ப்பாக மாறியது.
தனக்கு கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாத இஷான் கிஷன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 14.4 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இஷான் கிஷன் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


Click it and Unblock the Notifications

