மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு போட்டிகளில் விளையாடியும் ஒரு உலகக்கோப்பை போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
இதில் இந்தியாவை சேர்ந்த முக்கியமான வீரர்கள் என்றால் அது விவிஎஸ் லக்ஷ்மனும்,இஷாந்த் ஷர்மாவும் தான். இஷாந்த் சர்மா தன்னுடைய உயரத்தால் இந்திய வேகப்பந்து வீச்சு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார்.
19 வயதிலேயே ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களை எல்லாம் தடுமாற வைத்தார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இஷாந்த் சர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இது குறித்து பேசிய அவர் நான் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகியதற்கு காரணம். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மெல்போர்ன் டெஸ்ட் தான் என்று கூறியுள்ளார்.

தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி அது. திடீரென்று எனக்கு காலில் அதிக அளவு வலி ஏற்பட்டது. அந்த வலியை என்னால் தாங்கிக் கொள்ளக்கூட முடியவில்லை. முகமது சமி, உமேஷ் யாதவ், அஸ்வின் என மூன்று வீரர்கள் மட்டும்தான் பந்து வீசிக்கொண்டிருந்தார்கள். மூன்று பேருமே சோர்வடைந்து விட்டார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருந்தது.
மூன்று பேர் மட்டும் எவ்வளவு நேரம் பந்து வீச முடியும். மருத்துவரை கூப்பிடுங்கள் எனக்கு ஊசியை போடுங்கள். நான் வந்து வீசுகிறேன் என்று கூறினேன். அந்த டெஸ்ட் போட்டியில் ஐந்து செஷனில் நான் ஆறு ஊசிகளை போட்டுக் கொண்டேன். இவ்வாறு ஊசி போட்டு விளையாடுவது சரியல்ல, உலகக்கோப்பை வேறு வருகிறது என்று அப்போதைய பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் என்னிடம் கூறினார். ஆனால் என்னுடைய அணி நான் விளையாடாததால் தோற்றுவிட்டது என்ற காரணத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
இதனால் நான் பந்து வீசியே ஆக வேண்டும் என்று களத்தில் இறங்கினேன். நான் ஊசி போட்டு விளையாடியது எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த தருணத்தில் எனக்கு உலகக்கோப்பை பெருசாக தெரியவில்லை. பந்து வீசாமல் இங்கே உட்கார்ந்து அணியை ஏமாற்றுகிறோமோ என்ற எண்ணம்தான் எனக்கு மேலோங்கியது என்று இஷாந்த் ஷர்மா கூறினார். இஷாந்த் சர்மா விலகியதால் அந்த இடத்திற்கு மோகித் சர்மா பிறகு சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.