இஷாந்த் சர்மாவுக்கு ஐசிசி அபராதம்.. இந்தியாவின் தோல்வியோடு மற்றொரு அடி
பிர்மிங்ஹாம் : தற்போது நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இஷாந்த் சர்மாவின் விக்கெட் கொண்டாட்டத்திற்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி. போட்டியின் மூன்றாம் நாளின் போது, இங்கிலாந்தின் டாவிட் மாலன் விக்கெட்டை எடுத்த பிறகு கொண்டாடினார், இஷாந்த் சர்மா. அப்போது ஐசிசி விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இஷாந்த் சர்மா அருமையாக பந்து வீசினார். இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். எனினும், இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில், இஷாந்த் சர்மா வீசிய பந்தில் டாவிட் மாலன், ஸ்லிப்பில் நின்று இருந்த ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட இஷாந்த் சர்மா, டாவிட் மாலனின் அருகில் சென்று ஏதோ கூறினார். இந்த செயல் “ஒரு வீரரை கோபமூட்டும் வகையில்” இருப்பதாக, நடுவர்கள் புகார் அளித்து இருக்கிறார்கள். ஐசிசி விதிகளின்படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழக்கும் போது, அவரை கோபமூட்டும் வகையில் பேசுதல், செயல்படுதல் அல்லது சைகை செய்தல் ஆகியவை முதல் நிலை விதிமீறல் ஆகும்.
அந்த நாளின் போட்டி முடிந்த பிறகு, போட்டியின் ரெப்ரீ ஜெப் குரோவே முன்பு இஷாந்த் சர்மா தனது தவறை ஒப்புக்கொண்டு, அபாரதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி, அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமும், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்படும். இஷாந்த் சர்மா அதிக விக்கெட்கள் பெற்றாலும், இந்திய அணி தோற்ற சோகத்தில், மேலும் ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது இந்த அபராதம் மற்றும் விதிமீறல்.
இதே போட்டியில், விராட்கோஹ்லி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ரன் அவுட் செய்த பின்பு, மைக்கை ட்ராப் செய்வது போல சைகை காட்டினார். ஏற்கனவே, ஜோ ரூட் அது போல செய்ததை, கேலி செய்தார் கோஹ்லி. எனினும், அதை இங்கிலாந்து வீரர்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர்.
Story first published: Sunday, August 5, 2018, 11:11 [IST]
Other articles published on Aug 5, 2018


Click it and Unblock the Notifications