இந்தியாவின் ஸ்டூவர்ட் பிராட் ஆனார் இஷாந்த் ஷர்மா.. 'இலங்கை வாரிய' அணியை வாரி சுருட்டினார்
கொழும்பு: இலங்கை வாரிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. கோஹ்லி, ரோகித் ஷர்மா ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பினாலும், இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தது.
கொழும்புவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் வாரிய அணி கேப்டன் திரிமண்ணே, இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். தொடக்க விக்கெட்டுக்கு கே.எல். ராகுல், ஷிகர் தவான் இருவரும் 108 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 43 ரன்களில் கமகே பந்தில், குணதிலகவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கோஹ்லி ஏமாற்றம்
அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, 7 ரன்களிலும், கேப்டன் கோஹ்லி 8 ரன்களிலும் வெளியேறினர். இருப்பினும் ரஹானே, புஜாரா ஜோடி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு, ரன்களை சேகரிக்கத் தொடங்கியது. ரஹானே 109 ரன்களும் புஜாரா 42 ரன்களும் அடித்தனர். இந்திய அணி முதன் இன்னிங்சில் 351 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இஷாந்த் அபாரம்
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தனஞ்சயா டி சில்வா மற்றும் கவுசல் சில்வா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார். கேப்டன் திரிமண்ணே 5 ரன்களில் இஷாந்தின் பந்துவீச்சில் வெளியேறினார்.

இந்தியாவின் பிராட்
உபுல் தரங்கா, பெரைரா ஆகியோரும் டக் அவுட் ஆனார்கள். இலங்கை அணி 10 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மாதான் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 21 பந்துகள் வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னிலை
இதன்பிறகு வருண் ஆரோன், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணி, 121 ரன்களில் அவுட் ஆனது. இந்தியா 230 ரன்கள் முன்னிலை பெற்றது. இஷாந்த் ஷர்மா 23 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 15 ரன்கள் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை இழுத்து போட்டு அடித்ததை போல இருந்தது இஷாந்தின் பங்களிப்பு.

மீண்டும் கோஹ்லி சொதப்பல்
இதையடுத்து பாலோ-ஆன் கேட்காமல், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், முதல் இன்னிங்சைவிட ஒரு ரன்னே அதிகமாக எடுக்க முடிந்தது ரோகித்துக்கு. 8 ரன்னில் நடையை கட்டினார். கோஹ்லியும் 18 ரன்களில் அவுட் ஆகி, இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்பதை நிரூபித்தார். முன்னதாக விருத்திமான் சாஹா விக்கெட்டையும் இழந்து 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களுடன் தடுமாறிய இந்தியா, தொடர்ந்து ஆடிவருகிறது.


Click it and Unblock the Notifications