பிட்ச் எப்படி போனா எங்களுக்கென்ன.. கடைசியில் வெற்றி பெற்றோம்ல: மீடியாக்களுக்கு கோஹ்லி குட்டு
நாக்பூர்: ஊடகங்கள், ஆடுகளம் பற்றி எதை எழுதினாலும் கவலையில்லை, நாங்கள் டெஸ்ட் தொடரை வென்றது மட்டுமே முக்கியம் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த, 3வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்றுள்ளது இந்தியா.
போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய விராட் கோஹ்லி கூறியதாவது: ஆம்லா-டுப்ளசிஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் கொடுத்தபோது, அமித் மிஸ்ரா, அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க தான் தயாராக இருப்பதாக கூறினார். சொன்னதை போலவே செய்தார்.

இஷாந்தும் சிறப்பு
இஷாந்த் ஷர்மா விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்றபோதிலும், சிறப்பாக பந்து வீசினார். அதிகப்படியாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். தொடர்ச்சியாக 9 வருடங்கள் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா தோற்றதில்லை என்ற சாதனைக்காக அந்த அணிக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், அந்த அணியை வீழ்த்திய எனது சக வீரர்களுக்கும் பெருமை சென்று சேர வேண்டும்.

அஸ்வின் அபாரம்
இந்தியாவின் வெற்றிக்கு தொடர்ச்சியாக அஸ்வின் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவர் ஒரு சாம்பியன் பவுலர். அஸ்வின் மட்டுமின்றி, மிஸ்ரா மற்றும் ஜடேஜா இருவருமே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. ஜடேஜா உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி மீண்டும் அணியில் சேர்ந்து பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் ஜொலித்துள்ளார்.

பேட்ஸ்மேன்கள் கற்க வேண்டும்
இந்தியாவின் ஆடுகளங்கள் பற்றி கமெண்ட் அடிக்க அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால், அதைப்பற்றி புகார் கூற முடியாது. நாக்பூர் போன்ற பிட்சுகள், ஸ்பின்னை எப்படி எதிர்கொண்டு ஆட வேண்டும் என்ற படிப்பினையை பேட்ஸ்மேன்களுக்கு அளிக்க கூடியவை. இந்திய பேட்ஸ்மேன்களும் ஸ்பின் பந்துகளை எப்படி எதிர்கொள்வது என இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

விமர்சனம் பற்றி கவலையில்லை
பிட்ச் பற்றியும், இந்திய அணியின் பேட்டிங் பற்றியும், எத்தனை ஆர்டிக்கிள்களை மீடியாக்கள் எழுதினாலும், அது பிரச்சினையில்லை. இறுதியாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது மட்டுமே எங்களுக்கு முக்கியம். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications