ஐபிஎல்-இன்று பதான் சகோதரர்களின் அணிகள் மோதல்

ராஜஸ்தான் அணியில் யூசுப் பதானும், கிங்ஸ் லெவன் அணியில் அவரது சகோதரர் இர்பான் பதானும் இடம் பெற்றுள்ளனர் என்பதால் இந்தப் போட்டி சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியை ஈட்டியுள்ளன. மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள இரு அணிகளும் இன்றைய போட்டியை வெல்ல கடுமையாக முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேசமயம் இரு அணிகளும் தத்தமது கடைசிப் போட்டியில் வென்றுள்ளதால், புதுத் தெம்புடனும் உள்ளன.
இதை விட சுவாரஸ்யமாக யூயுப் பதான், இர்பான் பதான் ஆகியோரில் சிறந்தவர் யார் என்பதை அறியும் போட்டியாகவும் இது மாறியுள்ளது.
தனது கடைசிப் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸை சூப்பர் ஓவர் மூலம் தோற்கடித்தது. பஞ்சாப் அணியின் பேட்டிங் மோசமாகவே உள்ளது. ரவி போபரா மட்டுமே சற்று ஆறுதலாக ஆடி வருகிறார். யுவராஜ் சிங், மஹிளா ஜெயவர்த்தனே, குமார சங்கக்காரா ஆகியோர் இன்னும் தங்களது முத்திரையப் பதிக்கவில்லை.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சற்று சிறப்பாக ஆடியிருந்தாலும் கூட இன்னும் அவர் தனது முழுமையான பார்மை வெளிப்படுத்தாமலேயே உள்ளார்.
சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டுவென்டி 20 போட்டிகளில் ஸ்பின்னர்களாலும் அசத்த முடியும் என்பதை நிரூபித்தனர் இந்த அணியின் பையூஸ் சாவ்லா மற்றும் ரமேஷ் பவார் ஆகியோர்.
அதேபோல இர்பான் பதான், தெரான் ஆகியோரும் பந்து வீச்சில் சற்று சிறப்பாகவே செயல்பட்டனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்விகளுக்குப் பின்னர் கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்று தொடர் தோல்வியை நிறுத்தியது. கொல்கத்தாவை வென்ற தெம்புடன் தற்போது மொஹாலிக்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் அணியிலும் பேட்டிங் பலவீனமாகவே உள்ளது. யூசுப் பதான் மட்டுமே சற்று சிறப்பாக ஆடி வருகிறார்.
கடந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் ஜூன்ஜூன்வாலா முக்கிய வீரராக மாறியுள்ளார். ஷான் டெட், கொல்கத்தாவுக்கு எதிராக சிறந்த முறையில் பந்து வீசினார். அவர் பார்முக்கு வந்துள்ளது ராஜஸ்தானுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
கேப்டன் வார்னேவும், டெய்ட்டும் நிச்சயம் பஞ்சாப் பேட்டிங்கை பதம் பார்ப்பார்கள் என நம்பலாம்.
இரு அணிகளுமே தொடர் தோல்விகளால் துவண்டு தத்தமது கடைசிப் போட்டிகளில் வெற்றியை சுவைத்துள்ளவை என்பதாலும், பதான் சகோதரர்களின் மோதல் காரணமாகவும் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications