அதிரடியில் ஆஸி.யை அலற வைத்த இந்தியா..! 350 ரன்களை கடந்தால் ஜெயமே...!! ரசிகர்கள் எதிர்பார்ப்பு
லண்டன்:ஆஸி.க்கு எதிரான முக்கிய போட்டியில் இந்தியா 350 ரன்களை கடந்தால் வெற்றி நிச்சயம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி இருக்கின்றனர்.
உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று இந்தியா, ஆஸ்திரேலிய போட்டி. ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியின் போது இறங்கிய அதே அணி தான் இந்த போட்டியிலும் களம் காண உள்ளதாக கேப்டன் கோலி தெரிவித்தார்.
அதன்படி, வழக்கம் போல ஹிட் மேன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் பலத்த ஆரவாரங்களுக்கு இடையே ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அவசரப் படாமல் நிதானமாக இன்னிங்சை தொடங்கினர். பின்னர் மெது, மெதுவாக ரன் ரேட்டை உயர்த்த தொடங்கினர்.

தொடங்கிய அதிரடி
குறிப்பாக, கூல்டர்நைல் வீசிய 8வது ஓவர் அற்புதம். 3 பவுண்டரிகள் அடித்து அதிரடியை தொடங்கினார் தவான். நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்ரேட் குறைந்து விடாமலும் இருவரும் அற்புதமாக ஆடினர். அதிவேகமாக இருவருமே அரைசதம் அடித்தனர்.

ஆஸி. தடுமாற்றம்
ஸ்டார்க், கூல்டர்நைல், கம்மின்ஸ், ஜாம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் மாறி மாறி பந்து வீசினர். யாராலும் இந்திய அணியின் ரன் விகிதத்துக்கு அணை போட முடிய வில்லை. விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் தடுமாறினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 127 ரன்களை குவித்து, ஆஸி.யை அலற வைத்தனர்.

ரோகித் கேட்ச்
முடிவில், ரோகித் சர்மா 57 ரன்களில் கூல்டர்நைலின் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.(இதே கூல்டர் நைல் தான் தொடக்கத்தில் ரோகித்தின் கேட்சை கோட்டை விட்டவர்) இதையடுத்து தவானுடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடினார்.

தவான் சதம்
அதிரடியாக ஆடிய தவான்... ஆஸி.க்கு எதிரான முக்கிய போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர் 190ஐ எட்டிய போது இந்த சதத்தை அவர் நிறைவு செய்தார். அவருக்கு உறுதுணையாக கோலியும் திறம்பட பேட்டிங் செய்தார். 33. 5 ஓவர்களில் இந்திய அணி எளிதாக 200 ரன்களை கடந்தது.

350 ரன்களை கடக்கவேண்டும்
37வது ஓவரில் தவான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சாய்த்தவர் ஸ்டார்க். தவான் எடுத்த ரன்கள் 117. இன்னும் சுளையாக 15 ஓவர்கள் கையில் இருப்பதால்... அதிரடியை தொடர்ந்தால் இந்தியா அணி எளிதாக 350 ரனகளை கடக்கலாம். இதன் மூலம் ஆஸி. அணிக்கு நெருக்கடி தந்து போட்டியை தமது வசமாக்கலாம்.. இல்லையெனில்... 350 ரன்களுக்கு கீழ் என்றால் இந்த மைதானத்தில் ஆஸி.க்கு ஜூஜிபி இலக்காகி விடும்.


Click it and Unblock the Notifications