உலகக் கோப்பையோடு அப்ரிதிக்கு குட்பை சொல்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்!
கராச்சி: டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரோடு கேப்டன் பதவியிலிருந்து ஷாஹித் அப்ரிதி நீக்கப்படுகிறார். இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்தோடு வீரராகவும் அவர் அணியில் நீடிப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக வந்திருந்தார் ஷாஹாரியார் கான். ஆனால் பாகிஸ்தான் தோற்றுப் போனதால் அவர் ஏமாற்றத்துக்குள்ளானார். தற்போது அவர் லாகூர் திரும்பி விட்டார்.
லாகூரில் செய்தியாளர்களிடம் ஷஹாரியார் கான் பேசுகையில், உலகக் கோப்பையுடன் அப்ரிதி ஓய்வு பெறுவார் என்று தெரிவித்தார்.

உலகக் கோப்பையோடு சரி
இதுகுறித்து கான் கூறுகையில், உலகக் கோப்பையுடன் கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் அப்ரிதி. மேலும் அந்தப் போட்டியுடன் அவர் ஓய்வும் பெறுவார். இதுதொடர்பாக ஏற்கனவே வாரியமும், அப்ரிதியும் பேசி உடன்பாடு கண்டுள்ளோம்.

மனசு மாறினாலும் விட மாட்டோம்
ஒரு வேளை தொடர்ந்து விளையாடுவது என்று அப்ரிதி மனதை மாற்றிக் கொண்டாலும் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். வீரராக அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.

தப்பு செய்யலை
கேப்டனாக அப்ரிதியை நியமித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்தத் தப்பும் செய்யவில்லை. அப்படி நான் கருதவில்லை. எங்களது பணியை சரியாகத்தான் செய்தோம்.

சிறந்த வீரர்
அப்ரிதி பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மதிப்புக்குரிய வீரர். பல போட்டிகளை பாகிஸ்தானுக்காக வென்று கொடுத்தவர். எனவேதான் இயற்கையாக அவர் கேப்டனானார்.

விமர்சனம் சகஜம்தான்
எப்போதுமே ஒரு அணி போட்டியில் தோற்றால் விமர்சனங்கள் வருவது இயல்புதான். இப்போதும் அதுதான் வந்துள்ளது. இருப்பினும் அனைவரின் ஆதரவும் ஒரு கேப்டனுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

கோச்சம் மாறுகிறார்
பயிற்சியாளர் மாற்றம் குறித்தும் யோசித்து வருகிறோம். தற்போதைய பயிற்சியாளர் வக்கார் யூனிஸின் ஒப்பந்தம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதுகுறித்து வாசிம் அக்ரம் உள்ளிட்ட பல மூத்த வீரர்களுடன் ஆலோசித்தோம்.

யாரா இருந்தாலும் சரி
அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிக்க சிலர் யோசனை சொல்கிறார்கள். சிலர் உள்ளூர்க்காரர் போதும் என்கிறார்கள். கோச் யாராக இருந்தாலும் சிறந்த முடிவைத் தர வேண்டும். அதுதான் எங்களுக்குத் தேவை.

பாப் ஊமர் நல்லாத்தானே இருந்தார்
வெளிநாட்டுக் கோச்சுகளால் நல்லதும் நடந்துள்ளது. பாப் ஊமர் நல்ல பயிற்சியாளராக திகழ்ந்தார். எனவே பயிற்சியாளர் என்பது பிரச்சினை இல்லை. ரிசல்ட் என்ன என்பதுதான் முக்கியமானது.


Click it and Unblock the Notifications