இதை எதிர்பார்க்கலைல.. ஜட்டு - அக்ஷரின் வெறியாட்டம்.. விழிப்பிதுங்கிய ஆஸி,வீரர்கள்- இந்தியா முன்னிலை
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆடிய வெறியாட்டத்தால் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டது. அதுவும் 2வது நாளின் இறுதி செஷனில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த போதும் முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களை மட்டுமே குவித்தது ஆஸ்திரேலிய அணி.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாப் ஆர்டரில் தனி ஆளாக போராடி இந்தியாவுக்கு அடிதளம் அமைத்துக்கொடுத்தார். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டிற்கே 77 ரன்களை சேர்த்தனர்.

2வது நாள்
77 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுடன் முதல் நாளை முடித்த இந்திய அணிக்கு இன்று நடந்த 2வது நாள் ஆட்டத்திலும் சிறப்பாக அமைந்தது. தொடர்ச்சியாக அதிரடி காட்டிய ரோகித் சர்மா 212 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்ஸருடளுடன் 120 ரன்களை விளாசினார். எனினும் இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர்கள் ஏமாற்றினர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அஸ்வின் 23, சட்டீஸ்வர் புஜாரா 7, விராட் கோலி 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

திடீர் சரிவு
டி20 போட்டியை போலவே டெஸ்டிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்து துரதிஷ்டவசமாக அவுட்டானார். இதனால் 240 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்தது தடுமாறியது. சரி இனி அவ்வளவு தான் என நினைத்த போது நான் இருக்கிறேன் என களமிறங்கினார் ரவீந்திர ஜடேஜா. பவுலிங்கில் 5 விக்கெட்களை எடுத்ததை போலவே பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார்.

ஜட்டுவின் ரன் வேட்டை
தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய ஜடேஜா கிடைக்கின்ற நேரங்களில் சிறப்பாக பவுண்டரிகளை விரட்டினார். இவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய அக்ஷர் பட்டேலும் ஆஸ்திரேலிய பவுலர்களை சோதித்தார். இதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்களுடன் மிகவும் பலமான நிலையில் உள்ளது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு அரைசதங்கள்
170 பந்துகளை சந்தித்த ரவீந்திர ஜடேஜா 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களை விளாசினார். மறுமுணையில் 102 பந்துகளை எதிர்கொண்ட அக்ஷர் பட்டேல் 52 ரன்களை சேர்த்தார். இவர்கள் இருவரும் 8வது விக்கெட்டிற்கு மட்டும் 81 ரன்களை சேர்த்துள்ளனர். நாளைய ஆட்டத்தின் போது இவர்களில் ஒருவர் நிச்சயம் சதமடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications