ஜடேஜா, அஸ்வினால் சரிந்த ஆஸி.. இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 115 ரன்கள்.. யாருக்கு ஆடுகளம் சாதகம்?
டெல்லி : இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி ரோலர் கோஸ்டர் போல் இரு அணிகளுக்கும் சாதகமாக மாறி மாறி வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸி 2வது இன்னிங்ஸ்
ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறிய போது, அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடினார். இதன் மூலம் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடியது.

சரிந்த விக்கெட்
உஸ்மான் கவாஜா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிராவிஸ் ஹேட் மற்றும் லாபஸ்சேன் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தனர். 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்புடன் 3வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.

ஜடேஜா அபாரம்
அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹேட் மற்றும் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சரிவு தொடங்கியது. மார்னஸ் லாபஸ்சேன் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற, அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் நோக்கி அணி வகுப்பு நடத்தினர்.

113 ரன்களில் சுருண்டது
ஜடேஜா பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் சரிந்தது. ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போது இந்திய அணி 115 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications